தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிக்லாப்பில் புதிய ஒருங்கிணைந்த நடுவத்துக்கு சொந்த வடிவம் தரும் குடியிருப்பாளர்

2 mins read
8817e945-4927-4890-a5e3-14ca9ad201f9
டிசம்பர் 4ஆம் தேதி, சிக்லாப் சவுத் சமூக நிலையத்துக்கு வெளியே திரு எட்மண்ட் இங்குடன் (இடது) கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிக்லாப்பில் புதிய ஒருங்கிணைந்த நடுவத்துக்கான திட்டங்கள் செயல் வடிவம் பெற்று வருகின்றன.

அந்த மேம்பாட்டுத் திட்டத்தின் மையப் பகுதியில், 240 இருக்கைகள் கொண்ட ‘பிளேக் பாக்ஸ்’ அரங்கம் உள்ளது. இது, குடியிருப்பு வட்டாரங்களுக்கு நிகழ்கலைகளைக் கொண்டு வருவதற்கான இடமாக கருதப்படுகிறது. பூப்பந்து, வலைப்பந்து போன்றவற்றுக்கான பன்னோக்கு விளையாட்டுத் திடல்களையும் வேலை செய்வதற்கான இடங்களையும் இந்த வடிவமைப்பு உள்ளடக்கும்.

அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் 2029ல் கட்டி முடிக்கப்படவுள்ள அந்த நடுவம், 500 மீட்டர் தூரத்தில் உள்ள 64 ஆண்டு சிக்லாப் சவுத் சமூக நிலையத்துக்குப் பதிலாக அமையும்.

ஆனால், மற்ற புதிய சமூக மன்றங்களைப்போல இல்லாமல், எதிர்வரும் சிக்லாப் கட்டடத்துக்கான வடிவமைப்பு முறையை, சிக்லாப் குடியிருப்பாளரான கட்டடக்கலை நிபுணர் எட்மண்ட் இங் முன்னெடுத்தார்.

ஜூ சியட் சமூகத் தொண்டூழியரான திரு இங், 52, சொந்த கட்டடக்கலை நிறுவனத்தை நடத்தி வருகிறார். புதிய சமூக மன்றம் ஒன்றுக்கு யோசனைகளைத் திரட்டும் அமர்வில் சேர்வதற்கான விருப்பம் குறித்து ஜூ சியட் தொகுதி எம்.பி.யான திரு எட்வின் டோங், திரு இங்கிடம் கேட்டறிந்தார்.

ஆனால், உத்தேச சமூக நிலையத்துக்குப் பங்களிக்க விடுக்கப்பட்ட சாதாரண அழைப்பு, திரு இங்கிற்கு தனிப்பட்ட ஒரு திட்டப்பணியாக மாறியது. ஆய்விலும் திட்ட முன்மொழிவை வரைவதிலும் திரு இங் கிட்டத்தட்ட ஓராண்டுகாலம் செலவிட்டார்.

தங்களுக்கு என்ன வேண்டும் என்பதைக் குடியிருப்பாளர்களிடம் கேட்டறிந்த அவர், மற்ற சமூக மன்றங்களைப் பார்வையிட தீவு முழுவதும் சுற்றியதோடு சிக்லாப் பேட்டையின் வரலாற்றையும் படித்தார்.

தோட்டங்களால் சூழப்பட்ட மீன்பிடிக் கிராமமாக இருந்த சிக்லாப்பின் வரலாற்றிலிருந்து திரு இங்கிற்கு இறுதியான யோசனை எழுந்தது.

முதன்மைக் கட்டடக்கலை நிறுவனமாக நியமிக்கப்பட்டுள்ள ‘டிபி ஆர்கிடெக்ட்ஸ்’ நிறுவனத்திடம் வழங்கப்படும் திரு இங்கின் யோசனைகள், இத்திட்டப்பணியை நிறைவேற்றவும் பயன்படுத்தப்படும்.

கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சருமான திரு டோங், ஒரு பேட்டையில் அமைக்கப்படும் ஒருங்கிணைந்த நடுவத்துக்கு அதன் குடியிருப்பாளர் ஒருவரே முக்கியப் பங்கு வகிப்பது, தமக்குத் தெரிந்தவரை இதுவே முதன்முறை என்றார்.

இதுகுறித்து டிசம்பர் 4ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய திரு டோங், இதுபோன்ற திட்டங்களுக்கு மக்கள் கழகம் முதலில் நிபுணத்துவக் குழுவை ஈடுபடுத்திய பின்னரே தொண்டூழியர்களிடம் யோசனைகளைப் பெறும் என்றார். ஆனால் இம்முறை, மக்கள் கழகத்தை அணுகுவதற்கு முன்னதாகவே திரு இங் மற்றும் அவரின் குழுவினரிடமிருந்து முதன்மை வடிவமைப்பு வந்துவிட்டதாக திரு டோங் சொன்னார்.

நடுவத்தின் நிகழ்கலை அரங்கத்தின் வடிவமைப்புக்கு உதவ மற்ற சிக்லாப் குடியிருப்பாளர்களை நாட தாம் எண்ணம் கொண்டிருப்பதாக திரு டோங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்