ஹவ்காங் எம்ஆர்டி நிலையத்திற்கு மேல் உள்ள நிலப்பகுதியில் பேருந்து நிலையத்துடனான குடியிருப்பு-வர்த்தக வளாகம் ஒன்று கட்டப்பட இருக்கிறது.
அதே வேளையில், புதிய வீடுகளைக் கட்ட மவுண்ட் பிளசெண்ட், நியூட்டன், லேக்சைட் போன்ற வட்டாரங்கள் உட்பட சிங்கப்பூரில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள நிலப்பகுதிகளைத் தயார் செய்யும் பணிகள் நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஹவ்காங் வட்டாரத்தில் கூடுதல் வீடுகளுக்கான தேவை உள்ளது.
அங்கு கட்டப்படும் புதிய குடியிருப்பு-வர்த்தக வட்டாரம் இத்தேவையைப் பூர்த்தி செய்ய உதவும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் கூறியது.
ஹவ்காங்கில் கட்டப்பட இருக்கும் போக்குவரத்து மையம், புதிய வர்த்தக வசதிகள் ஆகியவற்றால் குடியிருப்பாளர்கள் பலனடைவர் என்று ஆணையம் தெரிவித்தது.
ஆணையத்தின் 2019ஆம் ஆண்டுக்கான பெருந்திட்டத்தின்கீழ், ஹவ்காங்கில் கிட்டத்தட்ட ஆறரை காற்பந்துத் திடல்களி்ன் பரப்பளவு கொண்ட நிலப்பகுதியில் அந்தப் புதிய குடியிருப்பு-வர்த்தக வளாகம் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹவ்காங் சென்ட்ரலுக்கும் ஹவ்காங் அவென்யூ 10க்கும் இடையில் உள்ள நான்கு ஹெக்டர் பரப்பளவு காலி இடத்தில் இந்த வளாகம் கட்டப்பட இருக்கிறது.
ஹவ்காங் மால் கடைத்தொகுதிக்குப் பக்கத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் ஹவ்காங் கிளை அலுவலகம் அமைந்துள்ள நிலமும் இதில் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
இந்த நிலப்பகுதி வடகிழக்கு ரயில் பாதையில் அமைந்துள்ள ஹவ்காங் நிலையத்தின் ‘பி’ நுழைவாயிலுக்கு மேல் உள்ளது.
2030ஆம் ஆண்டு ஹவ்காங்கில் எம்ஆர்டி ரயில் பாதைகள் சந்திப்பு நிலையத்துக்கான பணிகள் நிறைவடையும்போது புதிய வளாகம் குறுக்குத் தீவு ரயில் பாதையுடனும் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மவுண்ட் பிளசெண்ட்டில் வசிக்க இருக்கும் குடியிருப்பாளர்களுக்கு அந்த வட்டாரத்திலேயே கடைகள், குழந்தைப் பராமரிப்பு வசதிகள் இருக்கும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்தது.
மவுண்ட் பிளசெண்ட்டில் உள்ள ஆறு கட்டடங்கள் பாதுகாக்கப்படுவதாகவும் அவை சமகாலப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் அக்டோபர் 28ஆம் தேதியன்று உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஃபைசால் இப்ராகிம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.