‘நாங்கள் கதவுகளைப் பூட்டுவதில்லை’: கவலையில் ஹாலந்து ரோடு குடியிருப்பாளர்கள்

‘நாங்கள் கதவுகளைப் பூட்டுவதில்லை’: கவலையில் ஹாலந்து ரோடு குடியிருப்பாளர்கள்

2 mins read
9cbe37d0-0c50-4fe9-895f-d7aa2e048cf3
புக்கிட் செடாப் ரோட்டில் அமைந்துள்ள தனியார் தரைவீடுகள். இப்பகுதியில் 2 வீடுகளில் திருட்டுப் போனதாகக் கூறப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹாலந்து ரோடு பகுதியில் உள்ள சில வீடுகளைக் குறிவைத்துக் கொள்ளையடித்த கும்பல் குறித்த செய்தி கடந்த வாரம் வெளிவந்ததை அடுத்து அப்பகுதி குடியிருப்பாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தங்களின் வீடு நன்கு பூட்டப்படுவதை அவர்கள் உறுதிசெய்யத் தொடங்கியுள்ளனர். மேலும், திருட்டு எச்சரிக்கை ஒலி வேலை செய்கிறதா என்றும் சோதித்துப் பார்த்த வண்ணம் உள்ளனர்.

திருடர்கள் அடுத்து தங்களின் வீட்டைக் குறிவைக்கக்கூடாது என்பதற்காக குடியிருப்பாளர்கள் அதிக கவனத்துடன் உள்ளனர்.

கும்பலில் ஒருவரான சீன நாட்டவர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்ததாக அறியப்படுகிறது.

முன்வாசல், பின்வாசல், கதவுகள், சன்னல்கள் போன்றவற்றின் வழியாகத் திருடர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளதாகக் காவல்துறையினர் குடியிருப்பாளர்களுக்குக் கொடுத்த அறிவுறுத்தல் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கிடையே, தங்கள் மனதில் பயம் குடிகொண்டுள்ளதாக அந்தப் பகுதிவாசிகள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர்.

“எனக்குச் சற்று அதிர்ச்சியாக இருக்கிறது. சிங்கப்பூர் பாதுகாப்பான நாடு என்று நான் நினைத்திருந்தேன்,” என்றார் இல்லப் பணிப்பெண் ஒருவர்.

இதுவரை வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் தங்கள் வட்டாரத்தில் நடந்ததில்லை என்று குறிப்பிட்ட மற்றொரு குடியிருப்பாளர் திரு டியோ, இதனால் அனைவருக்கும் கவலை ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

கைதான சீன நாட்டவர் வூ ஜின்சிங், 27, ஆகஸ்ட் 5ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையானார். $528,000 மதிப்புடைய திருட்டுப்போன பொருள்களை நேர்மையற்ற முறையில் பெற்றுக்கொண்டதன் தொடர்பில் அவர் மீது குற்றம் கூறப்படுகிறது.

அவருக்கு உடந்தையாக இருந்தவர்களைக் கண்டுபிடிக்கக் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாகக் காவல்துறை வழக்கறிஞர் கூறினார்.

வூ மீண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலை ஆவார்.

குறிப்புச் சொற்கள்