கில்மன் பேரெக்ஸ் பகுதியையும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியையும் பாதுகாப்பது குறித்த கருத்துகளைத் தெலுக் பிளாங்கா குடியிருப்பாளர்கள் முன்வைத்துள்ளனர்.
தஞ்சோங் பாகார் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ரேச்சல் ஓங்குடன் இம்மாதம் 30ஆம் தேதி கலந்துரையாடல் நடைபெற்றது.
கில்மன் பேரெக்சிலும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியிலும் மறுமேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது பற்றி இம்மாதம் 26 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் ஏறக்குறைய 430 பேர் பங்கேற்றனர்.
மறுமேம்பாடு காணும் அந்தப் பகுதிகளில் புதிய வீடுகள் கட்டப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கில்மன் பேரெக்ஸ், கிளமெண்டியில் உள்ள மாஜூ வனப்பகுதி போன்றவற்றின் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பில் அந்த வட்டாரங்களுக்கு அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
ஜூலை 31ஆம் தேதி பிற்பகல் 12.15 மணிவாக்கில் இரு பகுதிகளின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு எதிராக இணையத்தில் பதிவேற்றப்பட்ட மனுவில் 46,090க்கும் மேற்பட்ட கையெழுத்துகள் பதிவாகின.
வனப்பகுதி தொடர்பில் தங்களுக்குப் பல மலரும் நினைவுகள் இருப்பதால் அதனைப் பாதுகாக்கும்படி குடியிருப்பாளர்கள் கூறியதாகத் திருவாட்டி ஓங் தெரிவித்தார். சிங்கப்பூரில் பொழுதுபோக்கிற்கான இயற்கைப் பகுதிகளும் குறைவு என்பதை வேறு சிலர் சுட்டினர்.
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் வெப்பநிலைக்கு இடையே கில்மன் பேரெக்ஸ், மாஜூ வனப்பகுதி ஆகியவற்றின்மூலம் கிடைக்கும் குளிர்காற்றின் நன்மைகளையும் அந்தப் பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்களில் சிலர் சுட்டினர்.
மறுமேம்பாடு குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படும்போதும் அதற்கு முன்பும் அதுகுறித்து தங்களுடன் கலந்துரையாடும்படி குடியிருப்பாளர்கள் விரும்புவதாகவும் திருவாட்டி ஓங் சொன்னார்.
ஆகஸ்ட் 6ஆம் தேதிவரை கில்மன் பேரெக்ஸ் வட்டாரத்தில் மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல், மரபுடைமை ஆய்வுகள் பற்றிய தங்கள் கருத்துகளைப் பொதுமக்கள் முன்வைக்கலாம்.
கில்மன் பேரெக்ஸ் பகுதிக்கான திட்டங்கள் 2024ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டன. முன்னாள் ராணுவத் தளமான அங்குள்ள 86 கட்டடங்கள் மரபுடைமை ஆய்வில் மதிப்பிடப்பட்டன.

