தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீச்சல் குளத்தில் வெளியே வந்த தரை ஓடுகள், கூர்மையான முனைகள் குறித்து குடியிருப்பாளர்கள் அதிருப்தி

2 mins read
9bd4ba0b-a6fd-4708-9fa9-04f876c6384e
இரண்டு மாதங்கள் கழித்தும் இப்பிரச்சினைக்கு எக்சகியூட்டிவ் கூட்டுரிமைக் குடியிருப்பின் நிர்வாகம் இன்னும் தீர்வு காணவில்லை என்று எங்கர்வேல் கிரசென்ட்டில் உள்ள ஒலா இசியைச் சேர்ந்த குடியிருப்பாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

செங்காங் வட்டாரத்தில் உள்ள புதிய எக்சகியூட்டிவ் கூட்டுரிமைக் குடியிருப்பில் (இசி) உள்ள இரண்டு நீச்சல் குளங்களின் பாதுகாப்பு அம்சங்கள், தரம் குறித்து குடியிருப்பாளர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நீச்சல் குளங்களில் உள்ள தரை ஓடுகள் வெளியே வந்துள்ளதாகவும் நீச்சல் குளத் தரையின் முனைகள் கூர்மையாக இருப்பதாகவும் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட நீச்சல் குளங்களும் தொடர்ந்து பலமுறை மூடப்பட்டன.

இரண்டு மாதங்கள் கழித்தும் இப்பிரச்சினைக்கு எக்சகியூட்டிவ் கூட்டுரிமைக் குடியிருப்பின் நிர்வாகம் இன்னும் தீர்வு காணவில்லை என்று எங்கர்வேல் கிரசென்ட்டில் உள்ள ஒலா இசியைச் சேர்ந்த குடியிருப்பாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

“நீச்சல் குளத்தின் தரை ஓடுகள் வெளியே வந்துள்ளதால் தரையின் முனைகள் கூர்மையாக உள்ளன. கவனமாக இல்லாவிட்டால் மிக எளிதில் காயமடையக்கூடும்,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த குடியிருப்பாளர் கூறினார்.

தமது வீட்டிற்கான சாவிகளை 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

சிறுவர்களுக்கான நீச்சல் குளத்தில் பல தரை ஓடுகளைக் காணவில்லை என்றார் அவர்.

அதனால் சிறுவர்கள் பலர் காயமடைந்ததாக மற்ற குடியிருப்பாளர்கள் தெரிவித்ததாக அவர் கூறினார்.

ஏப்ரல் மாத நடுப்பகுதியில் நீச்சல் குளம் மீண்டும் திறந்துவிடப்பட்டது.

ஆனால், தரை ஓடுகள் தொடர்பான பிரச்சினை தொடர்ந்ததால் ஏப்ரல் மாத இறுதியில் அது மீண்டும் மூடப்பட்டதாக அந்தக் குடியிருப்பாளர் கூறினார்.

இன்னொரு நீச்சல் குளம் மே இறுதியில் திறந்துவிடப்பட்டது என்றும் அதில் சில தரை ஓடுகளை இன்னும் காணவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இப்பிரச்சினை குறித்து மார்ச் மாதம் இறுதியில் புகார் செய்யப்பட்டதாக எக்சகியூட்டிவ் கூட்டுரிமைக் குடியிருப்பின் நிர்வாகம் தெரிவித்தது.

சோதனை நடத்துவதற்காக இரண்டு நீச்சல் குளங்களும் ஏப்ரல் 2ஆம் தேதியன்று மூடப்பட்டதாக அது கூறியது.

மறுசீரமைப்புப் பணிகள் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதியன்று தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

வெளியே வந்த தரை ஓடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்று நிர்வாகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

சிறுவர்களுக்கான நீச்சல் குளம் மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு ஏப்ரல் 19ஆம் தேதியன்று மீண்டும் திறந்துவிடப்பட்டது.

ஆனால், பணிகள் திருப்திகரமாக அமையவில்லை என்பதால் அது ஏப்ரல் 29ஆம் தேதியன்று மீண்டும் மூடப்பட்டது என்று செய்தித்தொடர்பாளர் கூறினார்.

சிறுவர்களுக்கான நீச்சல் குளத்தின் தரை ஓடுகள் அனைத்தையும் அகற்றிவிட்டு, புதிய தரை ஓடுகளைப் பொருத்த முடிவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்