தேர்தல் நேரத்தில் பல்வேறு கட்சிகள் முன்வைக்கும் தகவல்கள் குறித்து வாக்காளர்கள் தெளிவுடன் இருக்கவேண்டும் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.
நீ சூன் குழுத்தொகுதியில் ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியை எதிர்த்துப் போட்டியிடுகிறது மக்கள் செயல் கட்சி (மசெக). இரு கட்சிகளும் வாக்குறுதிகளை முன்வைத்திருக்கும் நிலையில் குடியிருப்பாளர்கள் எதனைக் கருத்தில் கொள்ளவேண்டும் எனக் கேட்கப்பட்டது.
பொருள், சேவை வரியை (ஜிஎஸ்டி) மீண்டும் 7 விழுக்காட்டுக்குக் குறைக்கும்படி கேட்க எண்ணுவதாக ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி கூறியுள்ளது.
இதனால் கூடுதலான பணத்தை மக்கள் திரும்பப் பெறுவர் என்று அந்தக் கட்சி கூறியது. அத்துடன், சிங்கப்பூரின் கரிம வரியையும் நீக்கும்படி அந்தக் கட்சி கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், சொங் பாங் வட்டாரத்திலுள்ள மசெக கிளை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திரு சண்முகம், தேசிய விவகாரங்களான மூப்படையும் சமூகம், முக்கியமான சுகாதாரத் தேவைகள் ஆகியவற்றை சிங்கப்பூர் எதிர்நோக்குவதாகவும் அதனால் சில நடவடிக்கைகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
ஜிஎஸ்டியின் கணிசமான பகுதியை அதிக அளவில் வருமானம் சம்பாதிப்போர் செலுத்துவதாகவும் அதன் வழியாகத் திரட்டப்படும் தொகை, மக்களுக்குத் தரப்படுவதாகவும் அவர் கூறினார்.
“இதனை எதிர்க்கட்சியினர் தெளிவுபடுத்தியிருக்கலாம். பகுதியளவு துல்லியமானவற்றைப் பேசுவதைவிடத் தகவல்களைத் தெளிவுபடுத்துவது முக்கியம்,” என்று அமைச்சர் கூறினார்.
வேட்பு மனுத் தாக்கல் முடிந்த மறுநாளே நீ சூன் தொகுதியில் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தலைமையிலான மக்கள் செயல் கட்சி வேட்பாளர் அணி, தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வாழ்க்கைச் செலவினம், வேலைகள், வீடமைப்பு, சுகாதாரத் துறை ஆகியவற்றைத் தங்கள் தேர்தல் அறிக்கை உள்ளடக்குவதாகத் திரு சண்முகம் கூறினார்.
‘குடியிருப்பாளர்களுக்கு முன்னுரிமை’ என்பது அந்த அறிக்கையின் தலைப்பாகும்.
புதிதாக 25 கூரைவேய்ந்த நடைபாதைகள், 20 விளையாட்டு இடங்களுக்கும் பெரியவர்களுக்கும் மூத்தோருக்குமான 22 உடற்பயிற்சி இடங்களுக்கும் மேம்பாடுகள் உள்ளிட்டவை இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஐந்தாண்டுகளில் 1,800 மீட்டருக்கும் நீளமான புதிய இணைப்புப் பாதைகள், 14 புதிய உடற்பயிற்சி இடங்கள், 26 புதிய விளையாட்டு இடங்கள், 26.5 கிலோமீட்டர் நீள சைக்கிள் பாதைக் கட்டமைப்பு ஆகியவற்றுடன் ஐந்து சமூகத் தோட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அறிக்கை வெளியிட்டபோது திரு சண்முகத்துடன் கோ ஹன்யான், டாக்டர் சையது ஹருன் அல்ஹப்ஷி, லீ ஹுய் யிங், ஜாக்சன் லாம் ஆகிய வேட்பாளர்களும் அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற நீ சூன் குழுத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேரி டான், டெரிக் கோ ஆகியோரும் அங்கு இருந்தனர்.
போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்துவது, பாலர் பராமரிப்பு வசதிகளை அதிகரிப்பது, அதிக மக்கள் நடமாட்டத்துக்கு தங்கு தடையற்ற இடங்கள் உள்ளிட்டவை கொள்கை அறிக்கையில் உத்தேசத் திட்டங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.