ஸ்போட்டிஸ்வூட் அக்கம்பக்க மேம்பாட்டில் குடியிருப்போருக்குக் கூடுதல் வாய்ப்பு

ஸ்போட்டிஸ்வூட் அக்கம்பக்க மேம்பாட்டில் குடியிருப்போருக்குக் கூடுதல் வாய்ப்பு

2 mins read
நகர மன்றமும் கொள்கை ஆய்வுக் கழகமும் (IPS) இணைந்து ஏற்பாடு செய்த சோதனைத் திட்டம்
9fda7ae3-7c8f-4652-8dc5-fcf032b220b2
வீடமைப்புப் பேட்டையில் உத்தேச மேம்பாட்டுப் பணிகள் குறித்துத் தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபூ செசியாங் (இடமிருந்து மூன்றாவது) ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) ஸ்போட்டிஸ்வூட் பார்க் குடியிருப்பாளர்களைச் சந்தித்து உரையாடினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அக்கம்பக்க மேம்பாடுகளில் ஸ்போட்டிஸ்வூட் பார்க் வீடமைப்புப் பேட்டைக் குடியிருப்பாளர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

அதன்படி, சிங்கப்பூரில் முதன்முறையாகக் குடியிருப்பாளர்கள் விரும்பும் மேம்பாடுகளை உள்ளடக்கிய உத்தேச வரவுசெலவுத் திட்டம் சோதனை முயற்சியாக ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) வெளியிடப்பட்டது.

அத்திட்டத்தில் ஏறத்தாழ 120 விருப்பங்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் செல்லப் பிராணிகளுக்கான விளையாட்டு, பிக்கல்பால் திடல், பொதுக் குடிநீர், கழிவறைகள் எனப் பல திட்டங்கள் பகிரப்பட்டன.

திட்டங்கள் செயல்படுத்தப்படக்கூடிய இடங்களைத் தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபூ செசியாங், குடியிருப்பாளர்களுடன் அன்றைய தினம் பார்வையிட்டார்.

குடிமக்களின் விருப்பங்கள் உள்ளடங்கிய மேம்பாட்டுத் திட்டத்திற்கான சோதனை வரவுசெலவுத் திட்டம், சிங்கப்பூரில் முதன்முறையாக வெளியிடப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

திட்டத்திற்கான நிதி எவ்வாறு ஒதுக்கப்படுகிறது என்பதைக் குடியிருப்பாளர்கள் அறிந்துகொள்ள இது வாய்ப்பளிக்கிறது. திட்டங்களை முன்மொழிவது முதல் ஒப்புதல் வழங்கியபின் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு வரை அவர்கள் பல விவரங்களை இதன் வழியாகத் தெரிந்துகொள்ளலாம்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் நகர மன்றங்களும் அக்கம்பக்க வட்டாரங்களைத் தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு மேம்படுத்துவதைப்போல் அல்லாது, இந்தப் புதிய முறைப்படி ஆரம்பம் முதல் குடியிருப்பாளர்கள் எண்ணங்களை முன்மொழிவதோடு அவற்றின் முழுமையான திட்ட வரைவிலும் பங்கேற்பார்கள்.

ஸ்போட்டிஸ்வூட் வீடமைப்புப் பேட்டையில் 460 வீடுகளில் வாழும் குடியிருப்பாளர்களுடன் மிகவும் ஆழமாகவும் துல்லியமாகவும் திட்டங்களில் கலந்து செயலாற்றியதாகத் திரு ஃபூ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புளோக் 108 ஸ்போட்டிஸ்வூட் பார்க் ரோட்டில் உள்ள கீழ்தளத்தில் குடியிருப்பாளர்களுடன் கலந்துரையாடியபோது, அவர் செய்தியாளர்களையும் சந்தித்தார்.

குடியிருப்பாளர்கள் பங்கேற்ற சோதனை வரவுசெலவுத் திட்டம், தஞ்சோங் பகார் நகர மன்றமும் கொள்கை ஆய்வுக் கழகமும் (IPS) இணைந்து ஏற்பாடு செய்த ஒன்றாகும்.

கடந்த 2025 ஆண்டு ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட அக்கம்பக்க மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஏற்றவாறு இப்புதிய வரைவுகள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்