சிக்லாப்பின் புளோக் 1ஐப் பாதுகாக்கும் யோசனைகளைப் பகிரும் குடியிருப்பாளர்கள்

சிக்லாப்பின் புளோக் 1ஐப் பாதுகாக்கும் யோசனைகளைப் பகிரும் குடியிருப்பாளர்கள்

2 mins read
4a6151aa-46f0-4352-9e97-49dd2ae85a34
1963ஆம் ஆண்டில் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் கட்டப்பட்ட புளோக் 1 தக்கவைக்கப்படும் என்றும் அது குடியிருப்பாளர்கள் பயன்படுத்துவதற்கான புதிய இடமாக மாற்றப்படும் என்றும் அதிகாரிகள் 2024ல் அறிவித்திருந்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிக்லாப்பில் உள்ள புளோக் 1ல் கோழிகளுடன் விளையாடியது, தமது தாயார் கீழ்த்தளத்தில் ரொட்டி விற்றது, அண்டைவீட்டாருடன் இணைந்து தொலைக்காட்சி பார்த்தது போன்ற பல நினைவுகள் திருவாட்டி டான் டாமுக்குப் பசுமையாகப் பதிந்துள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒட்டுமொத்த மறுமேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கிட்டத்தட்ட அந்த அறுபது ஆண்டுகால புளோக்கை இடிக்கவிருந்த திட்டத்தை அரசாங்கம் கைவிட்டபோது, அவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்தமுடியவில்லை.

“அக்கட்டடம் பாதுகாக்கப்படப்போகிறது என்பதை அறிந்ததும் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி. எனது குழந்தைப் பருவ நினைவுகள் அனைத்தும் அங்குதான் உள்ளன,” என்றார் அவர்.

பல்லாண்டுகளாக புளோக் 1ஐத் தங்கள் இல்லம் என்றழைத்த பலரில் திருவாட்டி டாமின் குடும்பமும் ஒன்று. 1963ஆம் ஆண்டில் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் கட்டப்பட்ட குறைந்த மாடிகளைக் கொண்ட நான்கு வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்குகளில் அதுவும் ஒன்று.

1962ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரிய தீச்சம்பவத்தில் கம்பொங் சிக்லாப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்துபோயின. வீடுகளை இழந்தோர்க்காக அந்த புளோக் கட்டப்பட்டது.

எதிர்காலத்தில் அந்தப் பழைய வீவக கட்டடம் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதை ஆராய, மக்கள் கழகமும் சிங்கப்பூர் நில ஆணையமும் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 11), சிக்லாப் சவுத் சமூக நிலையத்தில் ஏற்பாடு செய்த கூட்டம் ஒன்றில், 30 சிக்லாப் குடியிருப்பாளர்களுடன் 63 வயது திருவாட்டி டாமும் கலந்துகொண்டார்.

புளோக் 1 தக்கவைக்கப்படும் என்றும் அது குடியிருப்பாளர்கள் பயன்படுத்துவதற்கான புதிய இடமாக மாற்றப்படும் என்றும் அதிகாரிகள் 2024ஆம் ஆண்டில் அறிவித்திருந்தனர். மற்ற மூன்று புளோக்குகள் மேம்பாட்டுக்காகக் கட்டங்கட்டமாக இடிக்கப்பட்டுள்ளன.

தனிப்பட்ட கதைகள், பொருள்கள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தவும் கடந்தகாலத்தில் வாழ்ந்த சமூகமும் அவர்களின் வாழ்க்கையையும் எடுத்துக்காட்டவும், அந்தப் புளோக்கில் உள்ள சில வீடுகளை அரும்பொருளக இடங்களாக மாற்றுவதற்கான தமது யோசனையைப் பகிர்ந்துகொண்டார் திருவாட்டி டாம்.

இந்நிலையில், புதுப்பொலிவு பெறவிருக்கும் அக்கட்டடத்திற்கான யோசனைகளும் கருப்பொருள்களும் இன்னமும் ஆராயப்படுவதாக ஆணையமும் மக்கள் கழகமும் கடந்த சனிக்கிழமை தெரிவித்தன.

இருப்பினும், துடிப்புடன் முதுமையடைதல், இளையர் திட்டங்கள், சமூகத் தொழில்நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான இடமாக அப்பகுதியை மாற்றத் திட்டங்கள் உள்ளதாகவும் அவை கூறின.

குறிப்புச் சொற்கள்