தனியார் வீடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் குடும்பங்களும், வரும் ஏப்ரலில் இருந்து குறிப்பிட்ட வீட்டு உபயோகச் சாதனங்களை வாங்குவதற்கு $400 பெறுமானமுள்ள பருவநிலைப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பு, அண்மைய வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் வெளியாகி இருந்தது.
அரசாங்க மானியத்துடன் கூடிய துடிப்பான மூத்தோருக்கான மேம்பாட்டுத் திட்டம் ஒன்றும் தனியார் குடியிருப்புகளில் வசிப்போருக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய குடியிருப்பாளர்கள், இந்த அறிவிப்புகளை அறிந்து தாங்கள் ஆச்சரியப்பட்டதாகக் கூறினர்.
நீண்டகாலத்துக்கு முன்னர் தனியார் வீடுகளை வாங்கியோர், பொதுவாக அரசாங்க உதவியைப் பெறத் தகுதிபெறாமல் தாங்கள் விடுபட்டுவிடுவதாகக் கருதினர்.
பருவநிலைப் பற்றுச்சீட்டுகளைக் கொண்டு எரிசக்தி, தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தும் குளிர்சாதனங்கள், சலவை இயந்திரங்கள், குளிர்பதனப் பெட்டிகள் போன்றவற்றை வாங்கலாம்.
துடிப்பான மூத்தோருக்கான மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், அரசாங்க மானியத்துடன் கூடிய செலவில், வீடுகளில் பிடிமானக் கம்பிகளையும் சக்கர நாற்காலிகளுக்கான சரிவுத் தளங்களையும் மூத்தோர் பொருத்திக்கொள்ளலாம்.
பழைய தனியார் குடியிருப்புப் பேட்டைகளைக் கொண்ட பகுதிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், இந்த அறிவிப்புகள் வரவேற்கப்படுவதாகக் குறிப்பிட்டனர்.
வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி எம்.பி. ஆங் வெய் நெங், தனியார் வீடுகளில் வசிப்போர் இந்தப் பருவநிலைப் பற்றுச்சீட்டுகளை நன்கு பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுவதாகக் கருத்துரைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
பல்லாண்டுகளாக தங்கள் வீட்டுக் கழிப்பறைகளைப் புதுப்பிக்காத குடியிருப்பாளர்கள், துடிப்பான மூத்தோருக்கான மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் பலனடைவர் என்றார் அவர்.
“இத்தகையோர் பலரிடம் விலைமதிப்புடைய சொத்து இருக்கலாம், ஆனால் இவர்களிடம் சேமிப்பு குறைவாக இருக்கலாம். எனவே, இவர்களின் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்த இத்திட்டம் பெரிதும் உதவும்,” என்று திரு ஆங் எடுத்துரைத்தார்.
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி எம்.பி. ஷெரல் சான், மூத்தோருக்கான மேம்பாட்டுத் திட்டத்தை தனியார் வீடுகளில் வசிப்போருக்கும் நீட்டிக்க இதற்கு முன்னர் தாம் கோரியிருந்ததாகச் சொன்னார். கூட்டுரிமை, தரைவீடுகளில் வசிக்கும் மூத்தோர் பலரும் இதன்மூலம் பலனடைய முடியும் என்றார் அவர்.