ஈப்போ: மாநிலத் தேர்தல் பிரசாரத்தின்போது, தங்கள் பதவிகளைப் பயன்படுத்தி, ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளைத் தாக்கினால் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், மத்திய அரசாங்க அமைப்புகளின் தலைவர்கள் பதவியை விட்டு விலகவேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் எச்சரித்துள்ளார். மத்திய அரசாங்கத்தில் இணைந்திருக்கும் கட்சிகள் மாநிலத் தேர்தல்களில் ஒன்றையொன்று எதிர்த்துப் போட்டியிட சுதந்திரம் இருந்தாலும், மத்திய அரசாங்கப் பதவியில் இருப்பவர்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தங்களது பதவிகளை அரசியல் மேடைகளாக மாற்றக்கூடாது என்றும் திரு அன்வார் கூறினார். "அவ்வாறு செய்ய விரும்பினால், அவர்கள் முதலில் தங்கள் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் அல்லது அமைப்பு உறுப்பினர்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டும்," என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) ஈப்போவில் நடந்த சமூக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார். நெகிரி செம்பிலான் தேர்தல் பிரசாரத்தைத் தொடர்ந்து துணைப் பிரதமர்கள் டாக்டர் அகமது ஸாஹிட் ஹமிடி, ஃபாடில்லா யூசோப் ஆகியோருடன் சனிக்கிழமை நடந்த கலந்துரையாடலின்போது இந்த நினைவூட்டல் தெரிவிக்கப்பட்டது என்றார்.
டாக்டர் ஸாஹிட், ஃபதில்லா ஆகியோருடனான எனது கலந்துரையாடல்களின்போது, வேட்பாளர்களுக்கு, குறிப்பாக அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் அல்லது அரசாங்க அமைப்புகளின் தலைவர்கள் போன்ற பதவிகளை வகிப்பவர்களுக்கு, அவர்கள் அரசு தொடர்பான பிரச்சினைகளில் கருத்து தெரிவிக்கலாம் என்பதை நினைவூட்டினோம். "ஆனால் மத்திய அரசாங்க மட்டத்தில், அவர்கள் ஒரு பதவியை வகித்தால், அதை ஒருவரையொருவர் தாக்குவதற்கோ அல்லது முரண்படுவதற்கோ ஓர் அரசியல் தளமாகப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில், அவர்களும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்," என்று அவர் கூறியதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
மத்திய அரசாங்க அளவில் இணைந்து செயல்படும் கட்சிகள் மாநிலத் தேர்தல்களில் நேருக்கு நேர் மோதுவது ஒரு ஜனநாயக அமைப்பில் இயல்பானது என்று தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு அன்வார் கூறினார். "தற்போதைக்கு, மத்திய அரசாங்க அளவிலும் பேராக் போன்ற மாநிலங்களிலும் நமது நல்லுறவைப் பேணுவதற்கும் அரசாங்கப் பணிகள் சுமுகமாகத் தொடர்வதற்கும் அவர்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம்,” என்று அவர் தெரிவித்தார்.

