சிங்கப்பூரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் சமூக அமைதிக்கும் குடும்பங்களே அச்சாணியாக விளங்குகின்றன. மாறிவரும் நவீன காலத்தின் வேகத்திற்கு ஏற்ப, நமது குடும்பக் கட்டமைப்பும், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான உறவுமுறைகளும் எத்தகைய மாற்றங்களைச் சந்தித்து வருகின்றன என்பதை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் அண்மைய புள்ளிவிவரங்கள் நமக்குத் துல்லியமாகக் காட்டுகின்றன.
அவ்வகையில் புதிய 2026ம் ஆண்டிற்கான ‘’குடும்பப் போக்குகள் அறிக்கை’, நேர்மறையான சில மாற்றங்களையும், அதே வேளையில் நாம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய சில முக்கியமான சவால்களையும் முன்வைக்கிறது.
இவ்வறிக்கையில் ஒட்டுமொத்த சிங்கப்பூர் சமூகமும் வரவேற்கத்தக்க வகையில் இடம்பெற்றிருந்த ஒர் அம்சம், குடும்பப் பொறுப்புகளில் தந்தைமார்களின் பங்களிப்பு கணிசமாக அதிகரித்திருப்பதுதான்.
பிறந்த குழந்தையைக் கவனித்துக்கொள்ள வழங்கப்படும் சம்பளத்துடன் கூடிய தந்தையர் விடுப்பை எடுத்துக்கொள்வோரின் விகிதம் 61 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
இது வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல; சிங்கப்பூர் சமூகத்தில் ஏற்பட்டு வரும் ஒரு மாபெரும் மாற்றம், சிந்தனை புரட்சி.
பிள்ளைகளை வளர்ப்பதும் இல்லப் பணிகளைக் கவனிப்பதும் பெண்களுக்கான கடமை என்ற பழைமையான பிம்பம் உடைந்து, இல்லறம் என்பது இணையர் இருவருக்குமான சமபங்கு என்ற ஆரோக்கியமான புரிதல் நமது இளம் தலைமுறையினரிடம் வேரூன்றி வருவதை இது காட்டுகிறது. இந்த நேர்மறையான மாற்றம் இன்னும் விரிவடைய வேண்டும்.
குடும்பப் பராமரிப்பில் தந்தையர் பங்கு விரிவடைந்து வருவது மகிழ்ச்சியைத் தந்தாலும், மற்றொருபுறம், திருமணங்களின் எண்ணிக்கை 6.2 விழுக்காடு குறைந்திருப்பது தற்கால இளையர்களின் முன்னுரிமைகளும் வாழ்க்கைமுறைகளும் மாறி வருவதை உணர்த்துகிறது.
பொருளியல் சூழல், தொழில்முறை வளர்ச்சி போன்ற காரணங்களால் திருமணங்கள் தாமதமாகலாம் அல்லது தவிர்க்கப்படலாம்.
எனினும், இவற்றில் நிம்மதி தரும் அம்சம் என்னவென்றால், திருமணப் பந்தத்தில் இணைந்தவர்களில் 95 விழுக்காட்டினர் தங்களின் குடும்ப வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். அதற்கேற்ப மணமுறிவு விகிதங்களும் கடந்த பத்தாண்டுகளில் படிப்படியாகக் குறைந்துள்ளன.
திருமணங்களின் எண்ணிக்கை குறைவது கவலைக்குரியதாக இருந்தாலும், நடக்கும் திருமணங்கள் வலுவான அடித்தளத்துடனும் பரஸ்பர புரிதலுடனும் அமைவது சிங்கப்பூரின் வலுவான சமூக நிலைத்தன்மைக்கு நற்சான்றாகும்.
இருப்பினும், இந்த அறிக்கையில் ஒலித்த மிக முக்கியமான எச்சரிக்கை மணி, குடும்பப் பராமரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களாகும். ஒட்டுமொத்தமாக 90 விழுக்காடு சிங்கப்பூர்க் குடும்பங்கள் அதிக மீள்திறனைக் கொண்டுள்ளன என்று அறிக்கை கூறினாலும், மூத்தோரையும் பிணியுற்றோரையும் வீட்டில் இருந்து கவனித்துக் கொள்ளும் பராமரிப்பாளர்களின் வாழ்க்கைத் தரம், மற்றவர்களை விடக் குறைவாகவே உள்ளது.
தார்மிகப் பொறுப்புணர்ச்சியால் அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்தாலும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், நிதி அளவிலும் அவர்கள் பெரும் அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதை இந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
வேகமாக மூப்படையும் சமூகமாக சிங்கப்பூர் மாறி வரும் வேளையில், குடும்பங்களின் தூண்களாகத் திகழும் இவர்களை நாம் தாங்கிப் பிடிக்கத் தவறக் கூடாது.
குடும்பப் பராமரிப்பாளர்களுக்குப் பாராட்டுகள் மட்டுமே போதா; அவர்களுக்குத் தகுந்த நீக்குப்போக்கான வேலை முறை, மனநல ஆதரவு, மற்றும் தற்காலிக ஓய்வு அளிக்கும் பராமரிப்புச் சேவைகள் தாராளமாகக் கிடைக்க வேண்டும். நடைமுறையில் நலம் தரும் சாத்தியமான உதவிகளே அவசியம்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, சிங்கப்பூர்க் குடும்பங்களின் அடித்தளம் உறுதியாகவே உள்ளது. ஆனால், அந்த வலிமை நீடிக்க வேண்டுமானால், மாறிவரும் குடும்பக் கட்டமைப்பிற்கு ஏற்ப வேலையிடக் கொள்கைகளும் சமூக ஆதரவு அமைப்புகளும் இன்னும் விரைவாக மாற வேண்டும்.
அப்போதுதான், சவால்களைத் தாண்டி மீள்திறன் கொண்ட சமூகமாக சிங்கப்பூர் என்றும் மிளிர முடியும். குடும்பங்களும் தலைமுறைத் தாண்டியும் தழைக்க முடியும்.

