செயற்கை நுண்ணறிவு யுகத்தில் சிங்கப்பூரின் மனிதவளத்தை வலுப்படுத்த சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், மீள்திறன் கொண்ட ஊழியரணிக் கழகம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.
‘ரிசீலியன்ட் ஒர்க்ஃபோர்சஸ் இன்ஸ்டிடியூட்’ எனப்படும் அது, வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு மத்தியில் மனிதவள மீள்திறன், வாழ்நாள் கற்றலை மேம்படுத்தும் ஒரு புதிய, பல்கலைக்கழக அளவிலான ஆராய்ச்சி நிறுவனமாகச் செயல்படும்.
பொருளியல், மேலாண்மை, நடத்தை அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த, பல்துறை அணுகுமுறையின் வாயிலாகப் பெரியவர்களின் கல்வி, வேலையின் எதிர்காலம் ஆகியவற்றை ஒன்றிணைந்து ஆராய்வதில் சிங்கப்பூரிலேயே இது முன்னோடி நிறுவனங்களில் ஒன்றாகும்.
செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் கல்வி மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகியவை அளவற்ற நன்மைகளைத் தந்திருந்தாலும் அம்மாற்றங்கள் மிக வேகமாக நிகழ்ந்து வருவதால் அவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று டாக்டர் ஜனில் வலியுறுத்தினார்.
“ஒவ்வொருவரும் ஆழமான துறைசார் அறிவை வளர்ப்பதற்கு அப்பால் பணித்துறைகளில் மின்னிலக்கக் கருவிகள், செயற்கை நுண்ணறிவு, இயந்திரங்களை எவ்வாறு திறம்படப் பயன்படுத்துவது என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்,” என்றார் டாக்டர் ஜனில்.
அக்கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து கற்றுக்கொள்வதோடு நின்றுவிடாமல், அறிவுக்கும் திறன்களுக்கும் வலுசேர்க்கும் வகையில் அந்தத் தொழில்நுட்பங்களைப் பணிச்சூழலில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது, ஒருங்கிணைப்பது என்பன குறித்தும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
திறனாளர்களையும் தொழில்நுட்பத்தையும் திறம்படப் பயன்படுத்த முதலாளிகள் வேலைகளையும் செயல்முறைகளையும் மறுவடிவமைப்புச் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட டாக்டர் ஜனில், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் போன்ற கல்விக் கழகங்கள் இச்செயல்முறையில் பயிற்சிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அறிவு உருவாக்கம், சான்றுகள் சார்ந்த நடைமுறைக்கான மையமாகவும் திகழ்ந்து முக்கியப் பங்காற்றுவதாகச் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
புதிய நிறுவனம், வேலை, கற்றலின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில்நுட்பம், நிறுவனம், சமூகம், பெரியோர் கல்வி முறைகள் சார்ந்த புதுமைகளை வளர்க்கவும் மீள்திறன் கொண்ட மனிதவளத்தை உருவாக்கும் தேசிய முயற்சிக்குப் பங்களிக்கவும் உதவும் என்றார் டாக்டர் ஜனில்.
புதிய நிறுவனம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் முழுவதிலும் மேற்கொள்ளப்படும் துறைகளைக் கடந்த ஆய்வுகளுக்கு ஒரு மையப் புள்ளியாகத் திகழ்வதோடு, மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையிலான கூட்டுறவை மேம்படுத்துதல், நிறுவனங்களை உருமாற்றுதல், சமூக மனித மூலதனத்தை அதிகரித்தல் போன்றவற்றிலும் கவனம் செலுத்தும்.
நிறுவனத் துறையானது மொத்தம் $1.5 மில்லியனுக்கும் அதிகமான கூட்டு நிதி மதிப்புள்ள ஒன்பது தொடக்ககால நிதியுதவி பெற்ற ஆய்வுத் திட்டங்களையும், நிதியுதவி பெற்ற பல ஆய்வுத் திட்டங்களையும் அண்மையில் முன்னெடுத்துள்ளது.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் இந்நிறுவனத்தை நிலைநிறுத்த ஐந்து ஆண்டுகாலத்திற்கு $5 மில்லியன் ஒதுக்கியதோடு மூன்று ஆண்டுகளுக்குள் வெளிப்புற ஆய்வு நிதியாகக் கூடுதலாக $8 மில்லியன் திரட்டுவதையும் இலக்காகக் கொண்டுள்ளது.
தொடக்க நிகழ்ச்சியில் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகமும், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பும் செயற்கை நுண்ணறிவு, மின்னிலக்கத் தொழில்நுட்பங்கள், வேலை முன்னுரிமைகளில் ஏற்படும் தலைமுறை ரீதியான மாற்றங்கள் ஆகியவை, பணிப் பொறுப்புகள், திறன்களுக்கான தேவை போன்றவற்றை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பது குறித்து, உத்திசார் ஆராய்ச்சியை முன்னெடுக்க ஈராண்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

