சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே வர்த்தகமும் எல்லை தாண்டிய முதலீடுகளும் தொடர்ந்து வளர்ச்சியடைந்துவருகின்றன.
இந்நிலையில், தங்களுக்கு இடையிலான சச்சரவுகளை நீதிமன்றத்துக்குப் போகாமல் தீர்வை எட்ட நிறுவனங்களை ஊக்குவிக்க சிங்கப்பூரும் மலேசியாவும் உறுதிபூண்டுள்ளன.
ஏடிஆர்
அந்த வகையில், சச்சரவுகளுக்குத் தீர்வுகாண மாற்றுத் தீர்வு (ஏடிஆர்) முறைகளைப் பயன்படுத்த ஊக்குவிக்க சிங்கப்பூரும் மலேசியாவும் புதன்கிழமை (ஜூன் 3) இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
அதன்படி சிங்கப்பூரும் மலேசியாவும் ஏடிஆர் துறையில் தங்களின் சச்சரவுத் தீர்வு அமைப்புகளின் வாயிலாக ஒத்துழைப்பை மேம்படுத்திக்கொள்ளும். ஒரு நாட்டின் நிகழ்வுகளில் மற்றொன்று கலந்துகொள்வது, தகவல் பகிர்வு ஆகியவற்றின் மூலம் ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும் என்று சிங்கப்பூர் சட்ட அமைச்சு அறிக்கையில் தெரிவித்தது.
தீர்வுகாண வழிகள்
சமரசப் பேச்சு, நடுவர் மன்றம், நட்புமுறை நடவடிக்கைகள் போன்றவற்றின் வாயிலாக ஏடிஆர் மூலம் சட்டரீதியான சச்சரவுகளுக்குத் தீர்வுகாணப்படுவதுண்டு. எல்லை தாண்டிய வர்த்தகம் வளர்ந்துவரும் நிலையில் சச்சரவுகளுக்குத் தீர்வுகாணும் அமைப்புகளுக்கிடையே ஒத்துழைப்பு இருப்பதன் முக்கியத்துவம் அதிகரித்துவருவதாக சட்ட அமைச்சர் எட்வின் டோங் கூறினார்.
“இதுபோன்ற பங்காளித்துவங்கள் பரிமாற்றம், தகவல் பகிர்வு, கூட்டு முயற்சிகள் ஆகியவற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். அதேவேளை, இவ்வட்டாரத்தின் சச்சரவுத் தீர்வுக் கட்டமைப்பை அவை வலுப்படுத்தும்,” என்றார் உள்துறை இரண்டாம் அமைச்சருமான திரு டோங்.
அவர், மலேசியப் பிரதமர் அலுவலக (சட்ட, அமைப்புகள்ரீதியான சீர்திருத்தங்கள்) அமைச்சருமான அஸாலினா ஒத்மான் சாயித் ஆகியோரின் முன்னிலையில் இதன் தொடர்பில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
அவற்றில் ஒன்று, சிங்கப்பூர் அனைத்துலக நடுவர் மன்றம், கோலாலம்பூரில் உள்ள ஆசிய அனைத்துலக நடுவர் மன்றம் (ஏஐஏசி) ஆகியவற்றுக்கு இடையிலானது. மற்றொன்று சிங்கப்பூர் அனைத்துலக சமரச நிலையம், ஏஐஏசி ஆகியவற்றுக்கு இடையிலானது.
தொடர்புடைய செய்திகள்
பேச்சுவார்த்தை
சச்சரவுத் தீர்வுச் சேவைகளின் தொடர்பில் அமைச்சர்கள் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்ததையடுத்து இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. கடந்த பிப்ரவரி மாதம் ஃபிஜியில் நடைபெற்ற காமன்வெல்த் சட்ட அமைச்சர்கள் சந்திப்புக்கு நடுவே இருவரும் இதுபற்றிப் பேசினர்.

