சிங்கப்பூர் – மலேசியப் பங்காளித்துவம் இருநாடுகளுக்கும் இடையிலான மரியாதை, புரிந்துணர்வு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டது என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.
இவ்விரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது சில குறிப்பிட்ட விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பானதே. எனினும், அவை ஒட்டுமொத்தப் பங்களிப்பைப் பாதிக்க அனுமதிக்கக்கூடாது என்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) அவர் தெரிவித்தார்.
மலேசியாவிற்கு மேற்கொள்ளவுள்ள நான்கு நாள் அதிகாரத்துவப் பயணத்திற்கு முன்னதாக, மலேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவுக்கு அதிபர் தர்மன் எழுத்துபூர்வப் பேட்டி அளித்துள்ளார்.
“இரு நாடுகளுக்கு இடையிலான பங்காளித்துவம் என்பது பொதுவான பரஸ்பர மரியாதை, புரிதலின் அடிப்படையில் உருவானது. இது ஒருபோதும் வரவுசெலவுக் கணக்குகளைப் பார்க்கும் உறவாக இருந்ததில்லை, இருக்கவும்கூடாது,” அவர் வலியுறுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாகச் சில உணர்வுபூர்வமான, சிக்கலான இருதரப்புப் பிரச்சினைகள் இருந்து வந்துள்ளதை ஒப்புக்கொண்ட அவர், இரு அரசாங்கங்களும் அவற்றில் முடங்கிவிடாமல், அனைத்துலகச் சட்டங்களின்படி அமைதியான முறையில் பேச்சுவார்த்தை வழியாக தீர்வுகாணவே எப்போதும் முயன்றுள்ளன என்றார்.
உலகளவில் பதற்றங்கள் அதிகரித்துவரும் சூழலில், கடந்த 60 ஆண்டுகளில் இரு நாடுகளும் கட்டியெழுப்பியுள்ள இருதரப்புக்கான நம்பிக்கை, பொருளியல் ஒருங்கிணைப்பு, புதுப்பிக்கத்தக்க பசுமை எரிசக்தி போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“நமக்கு முன்னர் வாழ்ந்த தலைமுறையினர் இயல்பாக இருநாட்டு நல்லுறவை பரிமாறிக்கொண்டனர்.இந்தத் தலைமுறையினரும் இளையர் தலைமைத்துவப் பயிலரங்குகள் போன்ற ஒருங்கிணைந்த சமூக ஒன்றுகூடல்களின் வழியாக அவற்றை முன்னெடுக்க நாம் ஊக்கம் அளிக்கவேண்டும்,” என்று அதிபர் தர்மன் கேட்டுக்கொண்டார்.

