நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாக்க உயர் நெறிமுறைகளைப் பேணுவதும் சட்ட விதிமுறைகளுக்கு மதிப்பளிப்பதும் இன்றியமையாதது என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா கூறியிருக்கிறார்.
அரசியல் ரீதியாக விளைவுகள் சாதகமாக இல்லையென்றாலும் சட்ட விதிமுறைகளை மதித்துப் பின்பற்றுவது அவசியம் என்றார் அவர்.
முன்னதாக அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு சார்ந்த விவாதத்தின்போது சிங்கப்பூரின் பன்முகத்தன்மைமிக்க ஜனநாயகத்தைப் பேணுவதற்குக் கட்சி சாரா, கட்சி சார்ந்த பொறுப்புகளுக்குக் கால இடைவெளி தேவை என்று பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹி டிங் ரூ வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) கூறியிருந்தார்.
அதற்கு அமைச்சர் இந்திராணி பதிலளித்துப் பேசினார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் விறுவிறுப்பான விவாதம் இடம்பெற்றது. அமைச்சர் இந்திராணி விரிவாக விளக்கம் தந்தார்.
‘‘உலகளாவிய அரசியல் சூழல்களைப் பார்க்கும்போது, சில நேரம் ஜனநாயகம் முற்றுகையிடப்பட்டிருப்பதாகத் தோன்றலாம்; முன்னணி ஜனநாயக நாடுகளாகக் கருதப்பட்ட சில நாடுகளும் இந்தப் போக்கிற்குத் தப்பவில்லை.
‘‘நம்பிக்கை சிதைந்துள்ளது; ஒரு காலத்தில் மதிப்புமிக்கவையாகக் கருதப்பட்ட அமைப்புகள் செயலற்றவையாகியுள்ளன; சில நேரம் நேரடித் தாக்குதலுக்கும் அவை உள்ளாகியிருக்கின்றன.
‘‘எனினும் சிங்கப்பூரில் நிலவும் ஜனநாயகம் அத்தகைய மோசமான நிலையில் இல்லை என்பதற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கலாம்,’’ என்றார் அவர்.
மற்ற எந்தச் சமூகத்தையும் போலவே சிங்கப்பூரும் அத்தகைய அரசியல் இடர்களுக்கு உள்ளாகக்கூடிய சூழல் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். ஆயினும், அந்தப் பாதையில் செல்வதை நாடு பெருமளவு தவிர்த்துவந்துள்ளதை அவர் சுட்டினார். சிங்கப்பூர் அரசாங்கம் தொடர்ந்து உயர் நெறிமுறைகளையும் அடிப்படை மதிப்பீடுகளையும் கட்டிக்காத்ததே அதற்குக் காரணம் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
உலகெங்கிலும் பல்வேறு சட்டங்களைக் கொண்டிருந்தும் செயலற்றிருக்கும் ஜனநாயக நாடுகள் உள்ளதைச் சுட்டிய அவர், ‘‘ஜனநாயகம் யாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோ, அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்ணியத்துடனும் நேர்மையுடனும் செயல்படும்போது மட்டுமே ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்கும்,’’ என்று சொன்னார்.
அவை தவறாக நடக்கும்போது, தங்கள் பொறுப்பிற்கு உட்பட்ட அம்சங்களுக்கும் தங்கள் தனிப்பட்ட நடத்தைக்கும் பொறுப்பேற்கும் துணிவும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கும் அவர்களுக்கு இருக்க வேண்டும் என்று குமாரி இந்திராணி மேலும் தெரிவித்தார்.
ஜனநாயகத்தை வலிமையாகத் திகழச் செய்ய அரசாங்கம், எதிர்த்தரப்பு என இரண்டிலும் திறன்மிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டுக்குத் தேவை என்றும் குமாரி இந்திராணி குறிப்பிட்டார்.
கட்சிக்கு மேலாக நாட்டுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய, அர்ப்பணிப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவை என்ற அவர், சட்டங்கள் அவசியமானவை என்றாலும் அவை மட்டுமே போதுமானவை அல்ல என்றார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேர்மையுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் இந்திராணி வலியுறுத்தினார்.

