ஈஸ்ட் கோஸ்ட் கடலுணவு நிலையத்தைக் காலி செய்ய உணவகங்களுக்கு உத்தரவு

ஈஸ்ட் கோஸ்ட் கடலுணவு நிலையத்தைக் காலி செய்ய உணவகங்களுக்கு உத்தரவு

கோப்புப் படம்: லியான்ஹ சாவ்பாவ்

31 May 2026 - 4:28 pm

2 mins read

ஈஸ்ட் கோஸ்ட் கடலுணவு நிலையத்தில் செயல்படும் உணவகங்களை இவ்வாண்டுக்குள் காலி செய்யுமாறு தேசிய பூங்காக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

அந்த இடம், மறுமேம்பாட்டுக்காக மூடப்படுகிறது.

அந்த நிலையத்தில் செயல்படும் ஜம்போ சீஃபுட், லாங் பீச் போன்ற உணவகங்களிடம் காலி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூங்கா வருகையாளர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தைத் தருவதற்காக சுற்றுப்புறத்தை மேம்படுத்தி வசதிகளைப் புதுப்பிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அந்த இடம் மறுமேம்பாடு செய்யப்படுகிறது என்று நிலையத்தின் உரிமையாளரான தேசிய பூங்காக் கழகம் கூறியது.

முன்னதாக, வரும் 30ஆம் தேதி குத்தகை முடிவடையும்போது தனது முதன்மையான உணவகத்தை மூடப்போவதாக ஜம்போ சீஃபுட் அறிவித்தது.

இது குறித்து ஊடகங்கள் கேட்டதற்கு கழகம், மறுமேம்பாடு பற்றி விளக்கமளித்தது.

1980களில் தொடங்கியதிலிருந்து ஈஸ்ட் கோஸ்ட் கடலுணவு நிலையம் பிரபலமான உணவு நிலையமாக இருந்து வருகிறது என்று கழகம் குறிப்பிட்டது.

பூங்காவுக்கான நீண்டகாலத் திட்டங்களுடன் மறுமேம்பாடு ஆய்வு செய்யப்படுவதாகவும் அது பற்றி முடிவு செய்யப்பட்டதும் தகவல் வெளியிடப்படும் என்றும் அது கூறியது.

“குத்தகைதாரர்களுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்வதற்குப் போதுமான அவகாசம் அளிக்கும் வகையில் 2026ஆம் ஆண்டில் வளாகத்தைக் காலி செய்ய அவர்களிடம் முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது,” என்று கழகம் சொன்னது.

ஈஸ்ட் கோஸ்ட் கடலுணவு நிலையத்தில் ஜம்போ சீஃபுட் 1987ல் தொடங்கப்பட்டது. அது, அதன் பல உணவகங்களில் முதன்மையான உணவகமாகும். சிங்கப்பூரில் இதர ஆறு இடங்களில் ஜம்போ சீஃபுட் செயல்படுவதாக அதன் இணையப்பக்கம் தெரிவிக்கிறது.

சீனா, தென் கொரியா, தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளிலும் அதற்குக் கிளைகள் உள்ளன.

குறிப்புச் சொற்கள்
கடலுணவுஉணவகம்தேசிய பூங்காக் கழகம்