மருத்துவச் செலவினங்களைக் கட்டுப்படியான வகையில் வைத்திருக்கவும் தனியார் சுகாதார காப்புறுதித் திட்டங்களை நிலைப்படுத்தி, அதிகப்படியான மருத்துவக் கட்டணங்களைச் செலுத்த நேராமல் சிங்கப்பூரர்களைப் பாதுகாக்கவும் சுகாதார அமைச்சு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
உயர்ந்துவரும் காப்புறுதிச் சந்தாவையும் தனியார் மருத்துவச் செலவுகளையும் சமாளிக்க ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டங்கள் (ஐபி), துணைப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான (ரைடர்ஸ்) புதிய நிபந்தனைகளை அமைச்சு வெளியிட்டது.
புதன்கிழமை (நவம்பர் 26) வெளியான இந்த அறிக்கையின்படி, 2026 ஏப்ரல் 1 முதல் துணைப் பாதுகாப்புத் திட்டத்தில் புதிதாகச் சேர்வோர், சுகாதார அமைச்சு வகுத்துள்ள குறைந்தபட்ச மருத்துவக் கட்டணக் கழிவுத்தொகையை ஈடுசெய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். காலப்போக்கில் அதிகரிக்கும் மருத்துவக் கட்டணங்களைக் கருத்தில்கொண்டு, இணைக் கட்டணத்தின் குறைந்தபட்ச உச்சவரம்பு $6,000க்கு அதிகரிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சின் செய்திக் குறிப்பு கூறியது. தற்போது இக்கட்டணம் $3,000ஆக உள்ளது. அடுத்த ஆண்டு நடப்புக்கு வரவிருக்கும் புதிய நிபந்தனைகளுடன் கூடிய இந்தத் தனியார் மருத்துவமனைகளின் துணைப் பாதுகாப்புத் திட்டங்கள், காப்புறுதிச் சந்தாக்களை சராசரியாக 30 விழுக்காடு வரை குறைவாக வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கூறிய மாற்றங்களுடன் இன்னும் சில மாதங்களில் நடைமுறைக்கு வரவுள்ள துணைப் பாதுகாப்புத் திட்டத்தில் இணையும் சிங்கப்பூரர்களுக்கு கட்டுப்படியான விலையில் தனியார் சுகாதாரச் சேவைகள் கிடைக்கக்கூடும்.
இதனால், குறைந்த சந்தாக் கட்டணத்தால் பயன்பெறும் அதேவேளையில், பெரிய மருத்துவக் கட்டணங்களைச் செலுத்தும் சூழலையும் அவர்கள் எதிர்கொள்ள நேரிடாது என்றும் அமைச்சு நம்பிக்கை தெரிவித்தது. இந்த மாற்றங்கள், சுகாதாரக் காப்புறுதி எதற்காக வடிவமைக்கப்பட்டதோ அதற்கான இலக்கை மீண்டும் எட்ட உதவும். மேலும், அதிகப்படியான மருத்துவக் கட்டணங்களிலிருந்து நோயாளிகளைப் பாதுகாக்கவும் இது உதவும்.
புதிய திருத்தங்களுடன் கூடிய இந்தத் துணைப் பாதுகாப்புத் திட்டங்கள் 2026 ஏப்ரலில் நடப்புக்கு வரும் வேளையில், 2026 மார்ச் 31 வரை நடப்பில் உள்ள கூடுதல் காப்புறுதித் திட்டங்களை விற்பனை செய்வதைக் காப்புறுதி நிறுவனங்கள் தொடரலாம். இந்த மாற்றங்களால் விளையவுள்ள பலனை உடனடியாகக் கணிக்க முடியாது என்றாலும், துணைப் பாதுகாப்புத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நிபந்தனைகள் நாளடைவில் சுகாதாரப் பராமரிப்பின் மொத்த செலவுகளை மிதமடையச் செய்யும் என்று அமைச்சு கூறியது. இதற்கிடையே, ஏறக்குறைய 2 மில்லியன் சிங்கப்பூர்வாசிகளைப் பொறுத்தவரை, நவம்பர் 26ஆம் தேதிக்கு முன்பு துணைப் பாதுகாப்புத் திட்டத்தில் இணைவோருக்கான காப்புறுதித் தொகை நடப்புக்கு வரவிருக்கும் புதிய வழிமுறைகளுக்கு ஏற்றவாறு அமைக்க வேண்டுமா என்பது குறித்து ஏழு ஒருங்கிணைந்த காப்புறுதி நிறுவனங்கள் ஆய்வு செய்யும்.
மேலும், காப்புறுதிப் பயனீட்டாளர்கள் தங்கள் நிதி ஆலோசகர்களிடம் பேசி, புதிய துணைப் பாதுகாப்புத் திட்டங்கள் தங்களின் தேவைகளுக்கு ஏற்றதா என்பதைப் பரிசீலிக்க விரும்பலாம் என்றும் அமைச்சு கறியது.

