சிங்கப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் வரவிருக்கும் புதிய சட்டங்களும் நோயாளிகளின் மரபணுத் தகவல்கள் அவர்களின் மருத்துவக் காப்புறுதி நிறுவனத்திற்குக் கிடைக்காது என்பதை உறுதி செய்யும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் தேசிய இதய மையத்தில், நாட்டின் முதலாவது மரபணு மதிப்பீட்டு நிலையத்தை (ஜிஏசி) அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்த சுகாதார அமைச்சர் ஓங் யி காங், குடும்ப ஹைப்பர்கொலஸ்டிரோலீமியா (எஃப்எச்) கோளாறுக்கான தேசிய மரபணுச் சோதனைத் திட்டத்தின் அனைத்து சோதனை முடிவுகளையும் காப்புறுதி ஒப்பந்தத்திற்குப் பயன்படுத்த முடியாது என்று மீண்டும் வலியுறுத்தினார்.
‘எஃப்எச்’ என்பது மரபணுக்களில் ஏற்படும் பிறழ்வுகளால் ஏற்படும் ஒரு பரம்பரை நோய். இது கொழுப்பைச் செயலாக்கும் உடலின் திறனைப் பாதிக்கிறது. இதற்குச் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், ‘எஃப்எச்’ எனும் உயர் ரத்தக் கொழுப்பின் அளவு, காலப்போக்கில் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
ஒரு நபருக்கு காப்புறுதி ஒப்பந்தத்திற்குத் தேவையான மருத்துவ நோயறிதல், உதாரணமாக ‘எஃப்எச்’ இருப்பது போன்ற மருத்துவ நோயறிதல் கிடைத்திருந்தால், காப்புறுதித் திட்டங்களை வாங்கும்போது அவரது மருத்துவ வரலாற்றின் ஒரு பகுதியாக நோயறிதல் மட்டுமே வெளியிடப்பட வேண்டும்.
எஃப்எச்சுக்கான மரபணுச் சோதனைக்கு தனிநபர் உட்படுத்தப்பட்டால், அவர் சோதனை முடிவுகளை வெளியிட வேண்டிய அவசியமில்லை. மேலும் காப்புறுதி முடிவுகளில் அவற்றைப் பயன்படுத்த முடியாது என்று சமுதாய கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஓங் வலியுறுத்தினார்.
“மரபணுச் சோதனைக்கு உட்படுத்தப்படுவது காப்புறுதி ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை தனிநபர்களை மோசமான நிலையில் வைக்காது,” என்று அவர் மேலும் கூறினார்.
சுகாதார அமைச்சும் ஆயுள் காப்புறுதிச் சங்கமும் மரபணுச் சோதனை மற்றும் காப்புறுதி மீதான தடையை ஜூன் 30, 2025 அன்று விரிவுபடுத்தின. ஆயுள் காப்புறுதி நிறுவனங்கள் தேசிய ‘எஃப்எச்’ மரபணுச் சோதனைத் திட்டத்திலிருந்து பெறப்பட்ட அனைத்து மரபணுச் சோதனை முடிவுகளையும் தங்கள் காப்புறுதி ஒப்பந்தத்தில் கோருவதையும் பயன்படுத்துவதையும் கண்டிப்பாகத் தடை செய்தன.
மரபணுவியல் சார்ந்த பராமரிப்பில் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பதையும் சுகாதார அமைச்சு ஆய்வு செய்து வருவதாக திரு ஓங், ஜனவரி 19ஆம் தேதி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“எடுத்துக்காட்டாக, ‘எஃப்எச்’ திட்டத்தை மேலும் செம்மைப்படுத்த ஏஐ எவ்வாறு உதவும் என்பதை நாங்கள் ஆராய்வோம். இதனால் அதிக ஆபத்துள்ள நபர்களை அதிக துல்லியத்துடன் அடையாளம் காண முடியும்,” என்று திரு ஓங் கூறினார்.
சுகாதாரப் பராமரிப்பில் பொதுமக்களின் நம்பிக்கையைத் தொடர்ந்து கட்டிக்காக்க, தொழில்முறை நடைமுறைத் தரங்களும் சமூகப் பாதுகாப்பு நடைமுறைகளும் தொழில்நுட்பத்துடன் இணைந்து உருவாக வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

