சிங்கப்பூரில் இவ்வாண்டு மார்ச் மாதம் சில்லறை விற்பனை வளர்ச்சி மெதுவடைந்தது.
சீனப் புத்தாண்டு காரணமாகப் பிப்ரவரி மாத விற்பனை ஏற்றம் கண்டிருந்தாலும், ஈரான் போரின் விளைவாக வரவிருக்கும் மாதங்களில் விற்பனை மேலும் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான், அமெரிக்க மோதலால் எரிசக்தி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதுடன் விநியோகத் தடையால் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசியும் உயரத் தொடங்கியுள்ளது.
மேலும், மலிவு விலையில் பொருள்கள் கிடைப்பது சற்றுக் கடினமாகலாம். இருப்பினும், அரசாங்கத்தின் ஆதரவு நடவடிக்கைகள் அதன் தாக்கத்தைக் குறைக்கக்கூடும்.
சில்லறை விற்பனை ஆண்டு அடிப்படையில் மார்ச் மாதம் 4.8 விழுக்காடு வளர்ச்சி கண்டதாகச் சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை செவ்வாய்க்கிழமை (மே 5) வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
இது பிப்ரவரி மாதத்தில் பதிவான 8.3 விழுக்காட்டை விடக் குறைவு என்றும் அது சொன்னது.
மோட்டார் வாகனம், உதிரிபாகங்களைத் தவிர்த்து, சில்லறை விற்பனைத் துறையின் வளர்ச்சி ஆண்டு அடிப்படையில் 3.3 விழுக்காடு அதிகரித்தது.
அப்பிரிவு பிப்ரவரி மாதத்தில் 11.3 விழுக்காடு வளர்ச்சி கண்டிருந்தது.
மாதாந்தர அடிப்படையில், பருவகால மாற்றங்களுக்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட கணக்கீட்டின்படி, பிப்ரவரி மாதத்தைவிட மார்ச்சில் விற்பனை 4.1 விழுக்காடு அதிகரித்தது.
மார்ச்சில் மட்டும் $4.7 பில்லியன் அளவிற்குச் சில்லறை விற்பனை நடந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச் மாத சில்லறை விற்பனை எதிர்பார்ப்புகளை விஞ்சியுள்ளதாகவும் அது பிப்ரவரி மாத வளர்ச்சியிலிருந்து மெதுவடைந்திருப்பதை வெளிப்படுத்துவதாகவும் ஓசிபிசி வங்கியின் தலைமைப் பொருளியல் நிபுணர் செலினா லிங் தெரிவித்தார்.
சில்லறை வர்த்தகத் துறையில், பெரும்பாலான பிரிவுகள் ஆண்டு அடிப்படையில் வளர்ச்சி கண்டுள்ளன.
பொழுதுபோக்கு, மோட்டார் வாகனம் தொடர்பான பொருள்களும் முறையே 13.1 விழுக்காடு, 12.9 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்தன.
அதே வேளையில் கணினி, தொலைத்தொடர்பு சம்பந்தப்பட்ட கருவிகளின் விற்பனை 11.9 விழுக்காடு அதிகரித்துள்ளது.
அதற்கு கைப்பேசிகளின் விற்பனை அதிகரித்தே முக்கியக் காரணம் எனப் புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.
அதற்கு மாறாக உணவு, மதுபானங்கள், பகுதிவாரிக் கடை ஆகியவற்றின் விற்பனை முறையே 6 விழுக்காடு, 5.7 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

