சிங்கப்பூரில் சில்லறை வர்த்தகம் ஆண்டு அடிப்படையில் கடந்த நவம்பர் மாதம் 6.3 விழுக்காடு ஏற்றம் கண்டது. இந்தத் தகவலைச் சிங்கப்பூர் புள்ளிவிவரத்துறை திங்கட்கிழமை (ஜனவரி 5) வெளியிட்டது.
சில்லறை வர்த்தகத்துறையில் உள்ள பெரும்பாலான பிரிவுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆண்டு அடிப்படையில் வர்த்தகம் அதிகரித்ததாகத் தெரிவித்தன.
பொழுதுபோக்கு தொடர்பான பொருள்கள், கடிகாரங்கள் மற்றும் நகைகள், அழகு சாதனங்கள், குளியலறை தொடர்பான பொருள்கள், மருத்துவச் சாதனங்கள் ஆகியவற்றின் விற்பனை அதிகளவில் ஏற்றம் கண்டன.
தனியார் துறை பொருளியல் நிபுணர்களின் முன்னுரைப்பைவிட நவம்பர் மாதத்தில் சில்லறை வர்த்தகத்தின் வளர்ச்சி அதிகமாக இருந்தது.
புளூம்பர்க் ஆய்வில் பங்கெடுத்த தனியார் துறை பொருளியல் நிபுணர்கள் நவம்பர் மாதத்தில் சில்லறை வர்த்தகம் 4.9 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று முன்னுரைத்திருந்தனர்.
மோட்டார் வாகனங்களின் விற்பனையைச் சேர்க்காமல் சில்லறை வர்த்தகம் 5.8 விழுக்காடு அதிகரித்தது.
அக்டோபரில் பதிவான 3.7 விழுக்காடு வளர்ச்சியைவிட இது அதிகம்.
சில்லறை வர்த்தகத்தின் மொத்த மதிப்பு $4.4 பில்லியன் எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
14 பிரிவுகளில் 11 பிரிவுகளின் வர்த்தகம் ஆண்டு அடிப்படையில் ஏற்றம் கண்டது.
பகுதிவாரிக் கடைகளின் சில்லறை வர்த்தகம் 2.1 விழுக்காடு அதிகரித்தது.
பேரங்காடிகளின் வர்த்தகம் 6.8 விழுக்காடும் மளிகைக் கடைகளின் வர்த்தகம் 9.2 விழுக்காடும் உயர்ந்தது.
மோட்டார் வாகனங்கள் விற்பனை 10.4 விழுக்காடு அதிகரித்தது.
மரக்கலன்கள் மற்றும் வீடுகளுக்குத் தேவையான பொருள்களின் விற்பனை 9.4 விழுக்காடும் பொழுதுபோக்கு தொடர்பான பொருள்கள் 13.9 விழுக்காடும் கடிகாரங்கள் மற்றும் நகைகளின் விற்பனை 13.1 விழுக்காடும் ஏற்றம் கண்டன.

