சில்லறை விற்பனை 8.3 விழுக்காடு கூடியது

சில்லறை விற்பனை 8.3 விழுக்காடு கூடியது

2 mins read
4c7a0076-e516-4d13-8cf5-545e41ad49ff
மோட்டார் வாகனப் பிரிவைத் தவிர்த்து, சில்லறை விற்பனைத் துறை வளர்ச்சி ஆண்டு அடிப்படையில் 11.2 விழுக்காடு அதிகரித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் சில்லறை விற்பனை ஆண்டு அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்றம் கண்டது.

அதற்கு, அம்மாதம் கொண்டாடப்பட்ட சீனப் புத்தாண்டு ஆக முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட சரிவிலிருந்து சில்லறை விற்பனையை அது மீட்டிருந்தாலும், மாதாந்தர அடிப்படையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு வளர்ச்சியின் வேகத்தை மெதுவடையச் செய்யக்கூடும்.

ஜனவரி மாதத்தில் 0.5 விழுக்காடு சரிவு கண்ட சில்லறை விற்பனை, பிப்ரவரியில் ஆண்டு அடிப்படையில் 8.3 விழுக்காடு ஏற்றம் கண்டதாகச் சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை திங்கட்கிழமை (ஏப்ரல் 6) வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு ஜனவரியில் வந்த சீனப் புத்தாண்டு, இவ்வாண்டு பிப்ரவரியில் வந்ததே இந்த உயர்வுக்கு ஒரு முக்கியக் காரணம் என்றும் அது குறிப்பிட்டது.

மோட்டார் வாகனப் பிரிவைத் தவிர்த்து, சில்லறை விற்பனைத் துறையின் வளர்ச்சி ஆண்டு அடிப்படையில் 11.2 விழுக்காடு அதிகரித்தது.

ஜனவரியில் ஏற்பட்ட 2.9 விழுக்காடு வீழ்ச்சியிலிருந்து அது மீண்டுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மாதாந்தர அடிப்படையில், பருவகால மாற்றங்களுக்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட கணக்கீட்டின்படி, ஜனவரி மாதத்தைவிட பிப்ரவரியில் விற்பனை 4.1 விழுக்காடு வீழ்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

பிப்ரவரியில் மட்டும் $4.2 பில்லியன் அளவிற்குச் சில்லறை விற்பனை நடந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பெரும்பாலான, சில்லறை விற்பனைப் பிரிவுகள் ஆண்டு அடிப்படையில் வளர்ச்சி கண்டுள்ளன. குறிப்பாக, பேரங்காடிகள், மாபேரங்காடிகள் ஆகியவற்றில் விற்பனை 29.3 விழுக்காடு உயர்ந்தது.

இதன்மூலம், சில்லறை விற்பனைப் பிரிவுகளில் அவை முன்னணியில் உள்ளன.

பொழுதுபோக்கு தொடர்பான பொருள்களும் பகுதிவாரிக் கடைகளும் முறையே 26 விழுக்காடு, 16.8 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்தன.

அதற்கு நேர்மாறாக, எரிபொருள் நிலையங்கள், மோட்டார் வாகன விற்பனை நிலையங்கள் ஆகியவற்றின் விற்பனை முறையே 9.8 விழுக்காடு, 7.8 விழுக்காடு சரிந்தது.

மாதாந்தர அடிப்படையில், இந்த வீழ்ச்சி பரவலாகக் காணப்பட்டது.

ஆடை, காலணி ஆகிய பொருள்களின் விற்பனை 14.4 விழுக்காடு சரிந்தது; அதே நேரத்தில், கடிகாரங்கள், நகைகள் போன்றவற்றின் விற்பனை 13.9 விழுக்காடும், சிற்றங்காடிகளில் விற்பனை 13.8 விழுக்காடும் சரிவுகண்டன.

குறிப்புச் சொற்கள்