சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகத்தில், மே மாதம் 27ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 19ஆம் தேதி வரை 'புதிய புறப்பாடு: பயணம் வழி சிங்கப்பூர் அனுபவம்' என்ற ஒரு கண்காட்சி நடைபெறும்.
சிங்கப்பூரின் கடந்த 200 ஆண்டுகால பயணிகளின் வரலாற்றை அந்தக் கண்காட்சி சித்திரிக்கும்.
சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் முன்பு பயன்படுத்தப்பட்டு வந்த விமானத் தகவல் அறிவிப்புப் பலகை அந்தக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்படும்.
அந்தப் பலகை வியாழக்கிழமை (ஏப்ரல் 27) கண்காட்சியில் பொருத்தப்பட்டது. அதைக் காண ஊடகம் அழைக்கப்பட்டு இருந்தது. கண்காட்சி பற்றிய மேல்விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் எஞ்சியிருந்த இரு விமானத் தகவல் அறிவிப்புப் பலகைகளும் செயல்பாட்டிலிருந்து நீக்கப்படும் என சாங்கி விமான நிலையக் குழுமம் 2020 ஜனவரியில் அறிவித்திருந்தது.
அந்தப் பலகைகளுக்கான பாகங்களை வரவழைப்பதிலும் அவற்றைப் பராமரிப்பதிலும் சிரமம் ஏற்பட்டதை அது சுட்டியது.

