மனிதவள நிரந்தரச் செயலாளர் இங் சீ கெர்ன் டிசம்பர் 1ஆம் தேதி பணி ஓய்வுபெறுகிறார்.
அவர் கடந்த 41 ஆண்டுகளாக அரசாங்கத்துறையில் செவ்வனே பணியாற்றியதாகப் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
60 வயது திரு இங், 1984ஆம் ஆண்டில் வேலையில் சேர்ந்தார்.
அவர் படிப்படியாக உயர்ந்து 2006க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் விமானப் படைத் தலைவராகப் பதவி வகித்ததாகப் பொதுச் சேவைப் பிரிவு வியாழக்கிழமையன்று (அக்டோபர் 30) தெரிவித்தது.
அதையடுத்து, பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையின் இயக்குநராகத் திரு இங் நியமிக்கப்பட்டார்.
2014ஆம் ஆண்டில் அவர் தற்காப்பு மேம்பாட்டுக்கான நிரந்தரச் செயலாளரானார்.
2014ஆம் ஆண்டுக்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அவர் சுகாதார அமைச்சுக்கான இரண்டாம் நிரந்தரச் செயலாளராகவும் பதவி வகித்தார்.
அதன் பிறகு, 2017ஆம் ஆண்டில் பிரதமர் அலுவலகத்தில் அறிவார்ந்த தேசம், மின்னிலக்க அரசாங்கத்தின் முதல் நிரந்தரச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அந்தப் பதவியை அவர் வகித்தபோது, சிங்கப்பூரர்களுக்கும் வர்த்தகங்களுக்குமான மின்னிலக்கத் தீர்வுகளை உருவாக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அவர் தலைமை தாங்கினார்.
சிங்பாஸ், மைஇன்ஃபோ போன்றவை அவற்றில் அடங்கும்.
திரு இங் ஆற்றிய சேவைகளுக்குப் பொதுச் சேவைக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் சான் சுன் சிங் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
திரு இங் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டதாகவும் பொதுச் சேவைக்கு அவரது பங்களிப்புகள் மிகவும் முக்கியமானவை என்றும் அமைச்சர் சான் கூறினார்.

