ஆட்குறைப்பு செய்யப்போவதாக மின்னணுவியல், மின்சாரத்துறை ஊழியர் சங்கத்திடம் கடைசி நேரத்தில் மின்னணுவியல் நிறுவனமான டைசன் நிறுவனம் தகவல் தெரிவித்தது.
அக்டோபர் 1ஆம் தேதியன்று ஆட்குறைப்பு நடவடிக்கையில் டைசன் இறங்கியது.
ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.
ஆட்குறைப்பு குறித்து கடைசி நேரத்தில் (செப்டம்பர் 30ஆம்) தகவல் தெரிவிக்கப்பட்டது குறித்து சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் பேட்ரிக் டே அக்டோபர் 2ஆம் தேதியன்று அதிருப்தி தெரிவித்தார்.
ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டது தொடர்பாக டைசனுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சங்கம் கேட்டுக்கொண்டதாக மனிதவள அமைச்சு அக்டோபர் 3ஆம் தேதியன்று கூறியது.
அக்டோபர் 2ஆம் தேதியன்று டைசன் நிறுவனத்தினரை அமைச்சு சந்தித்துப் பேசியது.
சங்கத்துடனும் சந்திப்பு நடத்தப்படும் என்று அமைச்சு கூறியது.
இருதரப்பினர் முன்வைக்கும் கருத்துகளைக் கேட்டறிந்து சுமுகமான தீர்வை எட்டுவதற்கான வழிகள் குறித்து ஆராயப்படும் என்று அமைச்சு தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
“டைசன் செய்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஆட்குறைப்பு நடவடிக்கை நியாயமான, பொறுப்பான வகையில், படிப்படியாக நடைபெறுவதை உறுதி செய்ய டைசன் நிறுவனமும் சங்கமும் கலந்துரையாட வேண்டும். ஆனால் அதற்குப் போதுமான கால அவகாசத்தை டைசன் தரவில்லை,” என்று திரு டே தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.
கலந்துரையாடலுக்குப் போதுமான நேரம் ஒதுக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்க அது வழிவகுக்கும் என்று திரு டே கூறினார்.
தொழிற்சங்கங்களுக்கு உட்பட்ட நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வதற்கு முன்பு அதுகுறித்து தொழிற்சங்கங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்துவிட வேண்டும் என்று அக்டோர் 3ஆம் தேதியன்று அமைச்சு தெரிவித்தது.
“டைசன் நிறுவனம் தொழிற்சங்கத்துக்கு உட்பட்டது. ஆனால் ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்கள் தொழிற்சங்க உறுப்பினர்கள் அல்ல. எனவே, ஆட்குறைப்பு செய்வதற்கு முன்பு அதுகுறித்து சங்கத்திடம் எப்போது தகவல் தெரிவிப்பது என்பது கூடிக்கலந்து பேசத்தக்கது,” என்று மனிதவள அமைச்சு கூறியது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கவும் வேறு வேலை தேட உதவவும் பணிக்குழு ஒன்றை சங்கம் அமைத்திருப்பதாக திரு டே தெரிவித்தார்.

