சிங்கப்பூரில் ஆட்குறைப்பு 17.5% அதிகரிப்பு

சிங்கப்பூரில் ஆட்குறைப்பு 17.5% அதிகரிப்பு

2 mins read
31e740ef-d3f5-4e63-bdb4-10cd668d78e8
இவ்வாண்டு ஏப்ரல் மாதத்துக்கும் ஜூன் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் 4,500 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் சிங்கப்பூரின் ஊழியர் சந்தை தொடர்ந்து விரிவடைந்தபோதிலும் ஆட்குறைப்பு அதிகரித்துள்ளது.

மனிதவள அமைச்சு வெள்ளிக்கிழமை (ஜூலை 31) வெளியிட்ட முதற்கட்ட ஊழியர் சந்தைத் தரவுகள் அதைக் காட்டின.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் 4,500 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் பதிவான 3,830ஐக் காட்டிலும் இது அதிகம் என்று அமைச்சின் இணையத்தளம் தெரிவித்தது.

கடந்த 2020ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் 5,640 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்ட பிறகு பதிவான ஆக அதிக எண்ணிக்கை இது.

அந்த 17.5 விழுக்காட்டு அதிகரிப்பு, முக்கியமாகத் தொழில் மறுசீரமைப்பு காரணமாக, தகவல் தொடர்பு, உற்பத்தித் துறை போன்ற சில வெளிப்புறச் சந்தைகளைச் சார்ந்த துறைகளில் அதிகமாகக் காணப்பட்டதாக அமைச்சு தெரிவித்தது.

சிங்கப்பூரின் மொத்த வேலைவாய்ப்பு, அதாவது வேலை செய்யும் சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள், வெளிநாட்டு ஊழியர்கள் ஆகியோரின் எண்ணிக்கை, 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 10,700 அதிகரித்துள்ளது.

இது, அதற்கு முந்திய காலாண்டில் பதிவான 9,400ஐவிட அதிகம். அத்துடன், 2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பதிவான 10,400 என்ற எண்ணிக்கையோடு அது பெரும்பாலும் ஒத்திருக்கிறது.

முந்திய காலாண்டுடன் ஒப்பிடுகையில், வேலை செய்யும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை குறைந்த வேகத்திலேயே வளர்ச்சியடைந்துள்ளது. அந்த வளர்ச்சி முக்கியமாக அத்தியாவசிய, பொதுச் சேவைகள் துறைகளில் காணப்பட்டது.

இதற்கிடையே, இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் பதிவான ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு, கட்டுமானம், உற்பத்தித் துறைகளில் வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டதே முக்கியக் காரணமாக இருந்தது.

இவ்வாண்டு ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதம் 2 விழுக்காடாகத் தொடர்ந்து நிலையாக இருந்தது. அதற்கு முந்திய காலாண்டிலும் அந்நிலை இந்த அளவிலேயே இருந்தது.

இவ்வேளையில், அடுத்த மூன்று மாதங்களில் வேலைக்கு ஆள் சேர்க்கத் திட்டமிடும் நிறுவனங்களின் விகிதம் 43.9 விழுக்காடு கூடியது. அது இவ்வாண்டு மே மாதத்தில் பதிவான 40.6 விழுக்காட்டைக் காட்டிலும் அதிகம்.

அதே காலகட்டத்தில், சம்பளத்தை உயர்த்தத் திட்டமிட்டுள்ள நிறுவனங்களின் விகிதமும் 23.7 விழுக்காட்டிலிருந்து 29.3 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஆட்குறைப்புஅதிகரிப்புவேலைவாய்ப்பு