தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாயகம் திரும்பும் சிங்கப்பூரர்கள் உள்ளூர்ப் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 9 முதல் விண்ணப்பிக்கலாம்

2 mins read
7a4dfc83-cd0e-443a-a1c2-17c4390c7ee5
தேசிய நிலைத் தேர்வுகளை எழுத வேண்டிய வகுப்புகளான உயர்நிலை 4, தொடக்கக் கல்லூரி 2 ஆகியவற்றில் தாயகம் திரும்பும் சிங்கப்பூரர்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்கப்படமாட்டாது என்று கல்வி அமைச்சு கூறியது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தாயகம் திரும்பும் சிங்கப்பூரர்கள் கல்வி அமைச்சின் உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி அல்லது மில்லெனியா கல்விக்கழகம் ஆகியவற்றில் மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 9ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

2025ஆம் கல்வி ஆண்டில் பயில விரும்புவோருக்கு இது பொருந்தும்.

‘ஸ்பெர்ஸ்’ எனப்படும் தாயகம் திரும்பும் சிங்கப்பூரர்களுக்கான பள்ளி மாணவர் சேர்க்கைத் திட்டத்தின்கீழ் பொதுத் தேர்வு ஒன்றை அவர்கள் எழுதவேண்டும்.

அந்தத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மாணவர்கள் தகுதிபெறும் பள்ளிகளுக்கான பட்டியல் அவர்களுக்கு அனுப்பப்படும் என்று கல்வி அமைச்சு ஜூலை 2ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உயர்நிலை 1 முதல் 3 வரையிலான வகுப்புகளில் சேர விரும்புவோருக்கு ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் செப்டம்பர் 3, 4ஆம் தேதிகளில் ‘ஸ்பெர்ஸ்-செக்’ தேர்வு நடைபெறும். இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள் ஜூலை 22.

தொடக்கக் கல்லூரி முதலாமாண்டில் சேர விரும்புவோருக்கு ஆங்கிலம், கணிதம், பொதுத் திறன் ஆகிய பாடங்களில் நவம்பர் 7ஆம் தேதி ‘ஸ்பெர்ஸ்-ஜேசி/எம்ஐ’ தேர்வு நடைபெறும். அக்டோபர் 18ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தாயகம் திரும்பும் சிங்கப்பூரர்களுக்கு உயர்நிலை 4, தொடக்கக் கல்லூரி 2 ஆகிய வகுப்புகளில் மாணவர் சேர்க்கை வழங்கப்படமாட்டாது என்று கல்வி அமைச்சு கூறியது. அந்த வகுப்புகளில் பயில்வோர் தேசிய நிலைத் தேர்வுகளை எழுத வேண்டும் என்பதை அது சுட்டியது.

‘ஸ்பெர்ஸ்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தாங்கள் தகுதிபெறும் பள்ளி குறித்த முடிவுகளை டிசம்பர் மாதம் பெற்றுக்கொள்வர். 2025ஆம் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் அவர்கள் அந்தந்தப் பள்ளிகளில் சேரலாம்.

செப்டம்பரில் ‘ஸ்பெர்ஸ்’ தேர்வை எழுத இயலாத மாணவர்கள், டிசம்பரில் மீண்டும் நடத்தப்படும் ‘எஸ்பிஇ’ தேர்வை எழுத முடியும்.

அதற்கு நவம்பர் 1 முதல் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறும் தேர்வின் முடிவுகள் பிப்ரவரி 2025ல் வெளியாகும். மாணவர்கள் அந்த மாதமே பள்ளியில் சேரலாம்.

தாயகம் திரும்பும் சிங்கப்பூரர்கள் ‘எஸ்பிஇ’ தேர்வுக்குப் பதிலாக ‘ஸ்பெர்ஸ்’ தேர்வை எழுதும்படி கல்வி அமைச்சு ஆலோசனை கூறியுள்ளது. வகுப்பில் உள்ள சக மாணவர்களைப் போன்றே ஜனவரி 2025ல் அவர்கள் கல்வியைத் தொடங்க முடியும் என்பதை அமைச்சு சுட்டியது.

இதற்கு மாறாக, வீட்டுக்கு அருகில் இருக்கும் தொடக்கப் பள்ளி அல்லது உயர்நிலைப் பள்ளியில் சேர்வதற்கான ‘உறுதிப்படுத்தப்பட்ட மாணவர் சேர்க்கைத்’ திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம்.

அந்தந்தப் பள்ளி நடத்தும் தேர்வை மாணவர்கள் எழுத வேண்டியிருக்கும்.

இந்த மூன்று வகைத் தேர்வுகளையும் குறித்த மேல்விவரங்களுக்குக் கல்வி அமைச்சின் இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்