புதுப்பிக்கப்பட்டுவரும் மரின் பரேட் சமூகக் கட்டடம் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்தக் கட்டடத்தின் மறுசீரமைப்புப் பணிகள் தொடர்பான புதிய தகவல்கள் மரின் பரேட் வட்டாரத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) நடைபெற்ற சமூக நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன.
குடியிருப்பாளர்களின் ஒட்டுமொத்த நலனையும் சமூக உறவுகளையும் மேம்படுத்தும் பல்வேறு புதிய சேவைகளையும் வசதிகளையும் எதிர்பார்க்கலாம் என்று சமூக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மனிதவள அமைச்சரும் மரின் பரேட் அடித்தள ஆலோசகருமான டாக்டர் டான் சீ லெங் கூறினார்.
புதுப்பிக்கப்பட்ட சமூகக் கட்டடத்தில் 24 மணி நேர ஓய்விடத்துடன் இசை, நடனம், சமையல் ஆகியவற்றுக்கான கூடங்கள் போன்ற மேம்படுத்தப்பட்ட பொழுதுபோக்கு, கற்றல் வசதிகளும் அமைக்கப்படவுள்ளன.
பல்வேறு உணவு, பான வகைகளை வழங்கும் உணவுக் கடைகள் சமூகக் கட்டடத்தின் முதல் மாடியில் திறக்கப்படும். இத்துடன், அனைத்து வயதினருக்கும் துடிப்பான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கத் திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடமும் ஓடுவதற்கான தடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டடத்தில் ஏற்கனவே அமைந்திருந்த மரின் பரேட் பொது நூலகம், மேம்படுத்தப்பட்ட வளங்களுடன் பொதுமக்களுக்குத் தொடர்ந்து சேவை வழங்கும்.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் அமைந்துள்ள மரின் பரேட் பெருவிரைவு ரயில் நிலையமும் சமூகக் கட்டடமும் நேரடியாக இணைக்கப்படும்.
கூடுதலான கூரைவேய்ந்த இணைப்புப் பாதைகள், மரின் பரேட் குழுமத்துக்கான பேருந்துச் சேவைகள் முதலியவை அருகிலுள்ள வசதிகளுக்கான இணைப்புகளை மேலும் மேம்படுத்தும்.
தொடர்புடைய செய்திகள்
“உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அப்பால், இந்தப் புதுப்பிப்புப் பணிகள் மரின் பரேடை நன்கு இணைக்கப்பட்ட, எளிதாக அணுகக்கூடிய, குடியிருப்பாளர்களை மையமாகக் கொண்ட ஒரு வட்டாரமாக மாற்றுவதற்கு நாம் கொண்டுள்ள உறுதியைப் பிரதிபலிக்கிறது,” என்றார் டாக்டர் டான்.
சமூக நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, கட்டடக் கலைஞர்கள் விளக்கக்காட்சியின்வழி கட்டடத்தின் புதிய அம்சங்களை மரின் பரேட் குடியிருப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.
மாணவர்கள், மூத்த குடிமக்கள், நடமாடச் சிரமப்படுவோர் முதலியோருக்கு மேம்பட்ட ஆதரவை வழங்கும் நோக்கில், தாவ் நான் பள்ளிக்கு அருகிலுள்ள மேம்பாலத்தில் புதிய மின்தூக்கி ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட சமூகக் கட்டடம் 2025ல் திறக்கப்படும் என்று கடந்த 2022ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அது 2026க்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு, செலவு முதலியவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டிய அவசியம், கட்டுமானத் தளச் சிக்கல்கள் (complex site conditions), நிலப் போக்குவரத்து ஆணையத்துடனான ஒருங்கிணைப்புப் பணிகள் போன்றவை தாமதத்திற்கு வழிவகுத்ததாக டாக்டர் டான் விளக்கினார்.
“நூறு ஆண்டுகளுக்கு இந்தக் கட்டடம் நிலைத்து நிற்கும் என்று நம்புகிறோம்,” என்றார் அவர்.
புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்றுகொண்டிருக்கும் காலத்தில், மரின் பரேட் சமூக மன்றம் பிளாக் 67 மரின் டிரைவில் அமைந்திருக்கும் அதன் இடைக்கால அலுவலகத்திலிருந்து குடியிருப்பாளர்களுக்குத் தொடர்ந்து சேவை வழங்கும்.
சமூக நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், புதுப்பிக்கப்பட்ட மரின் பரேட் சமூகக் கட்டடம் போன்ற நகராண்மை மேம்பாடுகளுக்கு அப்பாற்பட்டு இந்தப் பொதுத்தேர்தலில் அனைத்துலகப் புவிசார் சவால்கள் மக்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று அமைச்சரிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த டாக்டர் டான், சிங்கப்பூர் எப்போதும் தொற்றுநோய்கள், பெருந்தொற்றுகள் உள்ளிட்ட அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வெளிப்புறச் சவால்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும் என்றார்.
அமெரிக்கா விதித்துள்ள வரிகள் தொடர்பாக ஏற்படக்கூடிய நிச்சயமற்றதன்மையை எதிர்கொள்ள அமைக்கப்பட்டுள்ள புதிய பணிக்குழுவில் தாமும் ஓர் உறுப்பினர் என்று குறிப்பிட்ட அமைச்சர், பணிக்குழு தற்போது திட்டமிடல் பணிகளில் கவனமாக ஈடுபட்டுள்ளதாகச் சொன்னார்.