ஜைரோ கட்டண வசூலிப்பு முறையின் பாதுகாப்புக்கு வலுவூட்ட சிங்கப்பூர் நாணய ஆணையம் (எம்ஏஎஸ்) , சிங்கப்பூர் வங்கிகள் சங்கத்துடன் (ஏபிஎஸ்) இணைந்து பணியாற்றுகிறது என்று தேசிய வளர்ச்சி, வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 8) தெரிவித்தார்.
ஒரு மாதத்துக்கான அதிகபட்ச வசூல் தொகை, மொத்தப் பரிவர்த்தனைகள் போன்றவற்றுக்கு வாடிக்கையாளர்-வரம்புகளை நிறுவுதல், கட்டணங்கள் பெற்றுக்கொள்ளும் நிறுவனங்களைக் கண்காணிக்கும் வழிமுறைகள் ஆகியன மறுஆய்வில் அடங்கும் என்று அவர் விளக்கிளார்.
சிங்கப்பூர் நாணய ஆணைய நிர்வாகக் குழு உறுப்பினரான திரு டான், தற்போது வாடிக்கையாளர்களின் அதிகபட்சப் பரிவர்த்தனைகளுக்கு வரம்புகளை நிர்ணயித்து, கட்டணம் பெறும் நிறுவனங்களைக் கண்காணித்தாலும் தவறுகள் நிகழாமல் அவை தடுத்துவிடமாட்டா என்பதையும் குறிப்பிட்டார்.
“வங்கிகள் சோதனை நடத்தினாலும் ஜைரோ கட்டண முறை முற்றிலும் தவறுகள் இல்லாத ஒன்று என்பதை உறுதி செய்யமுடியாது. இதுவரையில் அத்தகைய சம்பவங்கள் நடக்காமல் இருந்தாலும் பாதுகாப்பு அரண்களை அமைப்பது அவசியம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்,” என்றார் திரு டான்.
மாதந்தோறும் ஜைரோ அல்லாத மாறுபட்ட கட்டணப் பரிவர்த்தனைகளும் நேரடியாக வங்கிகள் வழியாக செய்யப்படுகின்றன. அதனைக் குறிப்பட்ட திரு டான், வாடிக்கையாளர்கள் தற்போதைய கட்டணங்களுக்குரிய முறையான ஜைரோ உச்ச வரம்புகளை அவர்களின் நிதி நிறுவனங்களுடன் ஏற்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
மவுண்ட்பேட்டன் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோ சி கீ, ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் லோ, ராடின் மாஸ் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங் ஆகியோர் ஜைரோ கட்டண முறைபற்றி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் திரு ஆல்வின் டான் பேசினார்.
மாணவர் பராமரிப்பு நிலையக் குழுமமொன்று பிப்ரவரி மாதம் மூடப்பட்டதால் ஜைரோ கட்டணங்கள் பெறப்பட்டது குறித்துப் பெற்றோர் கவலை தெரிவித்திருந்தனர். அதுபற்றித் திருவாட்டி கோ கேள்வி எழுப்பியிருந்தார்.
நடப்பில் உள்ள ஜைரோ சட்டதிட்டங்களின் வரைமுறைகளுடன் அதன் வாடிக்கையாளர்கள் பாதுகாப்புக்கு வலுவூட்ட நிதி அமைச்சு அதன் வழிவகைகளை மறுஆய்வு செய்யுமா என்ற கேள்வியை அவர் கேட்டிருந்தார்.

