மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தொடர்பான நடைமுறைகள் மறுஆய்வு

2 mins read
சுவாச, ரத்தப் பரிசோதனைகள் குறித்து போக்குவரத்துக் காவல்துறை
60fbb2ae-9524-4fd5-a813-698f5dcf2d65
சட்டப்படி அனுமதிக்கப்படும் புதிய வரம்புகள் குறித்து பின்னாளில் கூடுதல் விவரம் அளிக்கப்படும். - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் வாகனம் ஓட்டும்போது சட்டப்படி அனுமதிக்கப்படும் மதுபான வரம்பைப் போக்குவரத்துக் காவல்துறை மறுஆய்வு செய்யவுள்ளது.

தற்போது ஒவ்வொரு 100 மில்லி லீட்டர் சுவாசத்திலும் அதிகபட்சமாக 35 மைக்ரோகிராம் மதுபானம் அல்லது ஒவ்வொரு 100 மில்லி லீட்டர் ரத்தத்தில் அதிகபட்சம் 80 மில்லிகிராம்கள் மதுபானம் அனுமதிக்கப்படுகிறது.

போக்குவரத்துக் காவல்துறை அதன் வருடாந்திர புள்ளிவிவரங்களை பிப்ரவரி 21ம் தேதி வெளியிட்டதில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிப் பிடிபட்டவர்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 1,778ஆக இருந்தது. 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 6.9% அதிகரிப்பாகும்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை 2023ல் 180ஆக இருந்து கடந்த 2024ல் 166ஆக குறைந்தது. ஆனால், உயிரிழப்பு ஏற்பட்ட இத்தகைய விபத்துகளின் எண்ணிக்கை 2023ல் 11ஆக இருந்து கடந்த ஆண்டு 12ஆக அதிகரித்தது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் சம்பவங்களைக் குறைப்பதற்குப் புதிதாக ஏதேனும் நடவடிக்கைகளை உள்துறை அமைச்சு பரிசீலித்து வருகிறதா என்று தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி ஜோன் பெரேரா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதையடுத்து தற்போது நடப்பில் உள்ள வரம்புகள் மறுஆய்வு செய்யப்படும் என்று உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் அறிவித்தார்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிராகப் போக்குவரத்துக் காவல்துறையினர் தங்களின் அமலாக்க முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் பேராசிரியர் ஃபைஷால் குறிப்பிட்டார்.

சட்டப்படி அனுமதிக்கப்படும் புதிய வரம்புகள் குறித்து பின்னாளில் கூடுதல் விவரம் அளிக்கப்படும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் உள்துறை அமைச்சு தெரிவித்தது.

வேகக் கட்டுப்பாட்டை மீறும் வாகனமோட்டிகள் யாவர் என்றும் திருவாட்டி பெரேரா கேட்டிருந்தார்.

அவர்களில் பெரும்பாலானோர் ஆண் கார் ஓட்டுநர்கள் என்று 2024ஆம் ஆண்டின் தரவுகளின் அடிப்படையில் பேராசிரியர் ஃபைஷால் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்