தேசிய விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகைகள், அங்கீகாரம் தொடர்பான மறுஆய்வை சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றம் நிறைவு செய்திருப்பதாகத் தற்காலிகக் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் டேவிட் நியோ தெரிவித்துள்ளார்.
தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் சிங்கப்பூருக்காக வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றவர்களும் இதில் அடங்குவர் என்றார் அவர்.
மறுஆய்வின்போது எடுக்கப்பட்ட முடிவுகள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் நியோ கூறினார்.
முக்கிய விளையாட்டுப் போட்டிகள் விருதுத் திட்டத்தின்கீழ் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இத்திட்டத்தைச் சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றம் நிர்வகிப்பதுடன் ஆதரவாளர்கள் அதற்கு நிதி வழங்குகின்றனர்.
இத்திட்டத்தின்கீழ், தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் அதிகபட்சம் மூன்று தனிநபர் தங்கப் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர்கள் விருதுகள் பெற தகுதி பெறுவர்.
காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அதிகபட்சம் இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர்கள் விருதுக்குத் தகுதி பெறுவர்.
ஒலிம்பிக் போட்டியில் வென்ற முதல் தனிநபர் தங்கப் பதக்கத்துக்கும் விருது வழங்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
இத்திட்டத்தை மன்றம் அவ்வப்போது மறுஆய்வு செய்வதாகவும் விருது பெறும் விளையாட்டு வீரர்களின் பிரிவு மற்றும் வழங்கப்படும் ரொக்கப் பரிசுகள் குறித்து அது முடிவெடுப்பதாகவும் அமைச்சர் நியோ தெரிவித்தார்.
தேசிய விளையாட்டு வீரர்களுக்கான ஆதரவையும் நிதியையும் விரிவுபடுத்துவது தொடர்பாக பாசிர் ரிஸ் - சாங்கி குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வெலரி லீ, மார்சிலிங் - இயூ டீ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸ் யாம், பீஷான் - தோ பாயோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எலிசா சென் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் நியோ நாடாளுமன்றத்தில் பதிலளித்தார்.
விளையாட்டு வீரர்களின் நலன், நீண்டகால மேம்பாடு தொடர்பாக நடப்பில் உள்ள திட்டங்கள் எந்த அளவுக்குப் பலனளிக்கின்றன என்பதை அறிந்துகொள்ள அமைச்சு எவ்வாறு மதிப்பீடு செய்கிறது என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் நியோ, அது விளையாட்டு வீரர்கள் நாளுக்கு நாள் அடையும் முன்னேற்றம் மற்றும் தங்கள் முழு ஆற்றலை எட்டும் திறனைப் பொறுத்துள்ளது என்று கூறினார்.

