கட்டட (கூட்டுரிமை நிர்வாக) சட்டத்தை வலுப்படுத்த மறுஆய்வுகள்

கட்டட (கூட்டுரிமை நிர்வாக) சட்டத்தை வலுப்படுத்த மறுஆய்வுகள்

1 mins read
1240f5a3-7424-4ea7-a016-72c055177161
இந்த முன்னெடுப்புகள், மேம்பாடுகள் ஆகியவை அனைவரையும் உள்ளடக்கிய, பாதுகாப்பான சூழலுடன் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை உருவாக்கும் முதலீடு என்று தெரிவித்தார் தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா. - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு/யூடியூப்

பழைய கூட்டுரிமைக் குடியிருப்புகளில் அவசர அத்தியாவசியப் பணிகளுக்கான ஒப்புதல் வரம்பைக் குறைப்பது, போதிய நிதியின்மையைச் சமாளிக்க கூட்டுரிமைச் சொத்து மேலாண்மை நிறுவனங்கள் (MCSTs) வருங்காலச் செலவுக்காகப் போதிய நிதி ஒதுக்க உதவுவது உள்ளிட்ட நான்கு அம்சங்களில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் பிரதமர் அலுவலக அமைச்சரும் தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா.

மார்ச் 4ஆம் தேதியன்று அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கட்டட (கூட்டுரிமை நிர்வாக) சட்டத்தை வலுப்படுத்த விரிவான மறுஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, பழைய மின்தூக்கிகள், மின்படிக்கட்டுகள் ஆகியவற்றை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அவை, நவீன பாதுகாப்புத் தரநிலைகளுக்கேற்ப இருப்பதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்வதாகவும் தகுதியான தனியார்க் கட்டடங்களுக்குச் சில அத்தியாவசியப் பாதுகாப்பு அம்சங்களுக்கான கூட்டு நிதியுதவி வழங்குவதை ஆராய்வதாகவும் குமாரி இந்திராணி சொன்னார்.

கட்டடங்களுக்குள் எளிதாகச் சென்றுவரத் துணைபுரியும் வசதிகளுக்கான (Accessibility Fund) நிதியைத் துடிப்புடன் மூப்படைதல், மறதிநோயாளிகளுக்கு உதவும் வசதிகள் ஆகியவற்றுக்கும் நீட்டிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படுவதை அவர் சுட்டினார்.

“இந்த முன்னெடுப்புகள், தற்போதுள்ள சிங்கப்பூரர்களுக்கும் எதிர்காலச் சந்ததியினருக்கும் சிறந்த சிங்கப்பூரைக் கட்டமைப்பதில் உள்ள உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கின்றன,” என்று சொன்னார் அமைச்சர் இந்திராணி ராஜா.

குறிப்புச் சொற்கள்