நீடித்த நிலைத்தன்மைக்கான இலக்குகளை உள்ளூர் உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் எட்டுவதை கணித்திட, சீராய்வு செய்யப்பட்ட புதிய வழிகாட்டி நூல் உதவும் என்று என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல 21) தெரிவித்தது.
தயாரிப்பிலும் அவற்றுக்கான கலன்களில் அடைக்கப்படும்போதும் எந்த அளவு உணவு வீணாக்கப்படுகிறது என்பதை நிறுவனங்கள் கவனத்தில் கொண்டு, செயல்பாடுகளைச் சீரமைக்க வழிகாட்டி உதவும்.
அனைத்துலக ரீதியில் போட்டித் தன்மையுடன் நிறுவனங்கள் இயங்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் அங்கமாக இணையத்தில் அந்த வழிகாட்டி வெளியிடப்பட்டது.
இதுபற்றி கருத்துரைக்கும்போது, உலகில் நிலவும் பாதுகாப்புச் சவால்கள் உணவு உற்பத்தியையும், அதன் வர்த்தகத்தையும் மறுவடிவமைத்துவிட்டது என்று வர்த்தக, தொழில்துறை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் கூறினார்.
சுற்றுச்சூழலுக்கான தரங்கள் கடுமையாக்கப்பட்டு, புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதால், ஏற்றுமதியில் பசுமைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று அவர் விளக்கினார்.
‘உணவு உற்பத்தியாளர்களுக்கு நீடித்தநிலைத்தன்மைக்கான வழிகாட்டி’ என்ற இணைய நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் உரையாற்றும்போது இக்கருத்துகளைக் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கில் தொடர்ந்து மாறிவரும் சூழல் உலக வர்த்தகத்தை சீர்குலைத்து, விலைவாசியை உயர்த்தி, சில பொருள்கள் கிடைப்பதைத் தடை செய்துவிட்டது என்று அமைச்சர் விளக்கினார்.
எனவே உடனடியான செயல்பாடுகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், மீள்தன்மையைக் கட்டமைத்து, அபாயங்களை நிர்வகித்து, சந்தைகளை அடைவதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக்கொள்ளமுடியும் எனவும் அமைச்சர் லோ கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் எக்ஸ்போவில் 21 ஏப்ரல் முதல் 24 ஏப்ரல் வரையில் நான்கு நாள்கள் நடக்கும் உணவு, விருந்தோம்பல் ஆசியா (எப்ஹெச்ஏ) என்ற அனைத்துலக வர்த்தக விழாவில் இணைய நூல் வெளியிடப்பட்டது.
நீடித்த நிலைத்தன்மைப் பாதையில் செல்ல உணவு உற்பத்தியாளர்களுக்கென கடந்த 2023ஆம் ஆண்டு முதன்முதலில் வெளியிடப்பட்ட வழிகாட்டி நூல் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு மறுவெளியீடானது.

