போட் கீ வட்டாரம், அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளின் துடிப்புத்தன்மை பற்றிய கருத்துகளை மறுஆய்வு செய்துள்ள அரசாங்கம், அப்பகுதிகளுக்குப் புத்துயிரூட்டும் சில நடவடிக்கைகளைச் செயல்படுத்தவுள்ளது.
போட் கீ, அப்பர் சர்க்கியுலர் ரோடு, கிளார்க் கீ உள்ளிட்ட சில பகுதிகளில் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாள்களில் அதிகாலை நான்கு மணி வரை மதுபானம் விற்பதற்கான உரிமங்களுக்கு அந்த வட்டாரங்களைச் சேர்ந்த உணவக மதுக்கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள் முதலியவை விண்ணப்பிக்கலாம்.
போட் கீ வாட்டர்ஃபிரண்ட், சர்க்கியுலர் ரோடு, லோரோங் தெலுக், கேண்டன் ஸ்திரீட் ஆகிய இடங்களில் புதிய மதுபானக் கூடங்களையும் கேளிக்கைக் கூடங்களையும் அமைக்க வர்த்தகங்கள் அனுமதிக்கப்படலாம்.
அத்துடன், நிகழ்ச்சிகளுக்கும் பாதசாரிகளுக்கு உகந்த நடவடிக்கைகளுக்கும் இடமளிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மாலை நேரங்களிலும் பொது விடுமுறைக்கு முந்தைய நாள்களிலும் சர்க்கியுலர் ரோட்டை வாகனங்கள் நுழையாதபடி மூடுவதற்கான திட்டங்களும் உள்ளன.
இரவு நேர உல்லாசப் பகுதியான மேற்கூறப்பட்ட வட்டாரங்களில் வர்த்தகங்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக புதிய முயற்சிகள் ஒத்துப்போவதாக உள்துறை அமைச்சும், வர்த்தக, தொழில்துறை அமைச்சும் தேசிய வளர்ச்சி அமைச்சும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) வெளியிட்ட செய்தி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
மேற்கூறப்படும் திட்டங்களைச் செயல்படுத்தும் ஓர் ஆண்டு சோதனைத் திட்டத்தை அரசாங்கம், வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என்றும் அறிக்கை கூறுகிறது.
சிங்கப்பூரின் துடிப்புத்தன்மையையும் ஈர்ப்புத்தன்மையையும் மேலும் அதிகரிக்க அரசாங்கம், பங்காளிகள் சிலவற்றுடன் கூட்டு சேர்ந்திருப்பதாக சட்ட அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான கா. சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“சிங்கப்பூர் ரிவர் ஒன், சிங்கப்பூர் இரவு கேளிக்கை வர்த்தகச் சங்கம் உள்ளிட்ட பங்காளிகளுடன் அரசாங்கம் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். போட் கீ, கிளார்க் கீ வட்டாரங்களுக்கு இந்த நடவடிக்கைகள் புத்துயிரூட்ட முற்படுகின்றன. அது வெவ்வேறு கட்டங்களில் நடைபெறும் என்று நினைக்கிறேன்,” என்று திரு சண்முகம் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
புதிய கேளிக்கைக் கூடங்களுக்கும் மதுபானக் கூடங்களுக்குமான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சிங்கப்பூர் ரிவர் ஒன் உதவுகிறது. புதிய இடங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டால் சோதனைத் திட்டத்தின் அங்கமாக அவை செயல்படுவதற்கு மூன்று ஆண்டுகள் வரையிலான அனுமதி வழங்கப்படலாம்.
‘‘சிங்கப்பூரில் மக்களுக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை வழங்குகிறது என்றாலும், வர்த்தக உரிமையாளர்களும் ஓரளவுக்குப் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்கவேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்,’’ என்றார் திரு சண்முகம்.
“இது சமநிலையுடன் இருக்கவேண்டும். கேளிக்கைக் கூடங்களைக் அதிகமாகத் திறக்கும்போது கூடுதலான சம்பவங்கள் ஏற்படலாம். இது கைமீறிப் போகக்கூடாது. எனவே, முயற்சி செய்யும் பொறுப்பு உரிமையாளரான அவர்களுக்கும் உள்ளது. அதனால், அவர்கள் பாதுகாவல் அதிகாரிகளைக் கூடுதலான எண்ணிக்கையில் வரவழைப்பர்,” என்று திரு சண்முகம் கூறினார்.
இதன் முடிவுகள் கண்காணிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

