எலி பிடித்துக் கொடுத்த கிளமெண்டி கடைக்காரர்களுக்கு $100 வரை வெகுமதி

2 mins read
d8c47084-e4b8-4529-bfd8-0b4405f8966b
சிறிய எலிகளுக்கு சிறிய தொகையும் பெரிய எலிக்கு 100 வெள்ளி வரையிலும் கடைக்காரர்கள் சங்கம் வெகுமதி வழங்குகிறது. - படம்: ஷின் மின்

கிளமெண்டி உணவங்காடி நிலைய கடைக்கார்கள், எலி பிடித்துக் கொடுத்தவர்களுக்கு 100 வெள்ளி வரை வெகுமதி வழங்கி பாராட்டியிருக்கிறது.

கடைக்காரர்கள் ஒன்றுசேர்ந்து உணவங்காடி நிலையத்தைத் தூய்மையாக வைத்திருப்பதே வெகுமதித் திட்டத்தின் நோக்கமாகும்.

உணவங்காடி நியைத்தில் எலிகள் அங்கும் இங்கும் ஓடித் திரிவதாக அக்டோபர் 31ஆம் தேதி அங்கு சென்ற ஷின் மின் செய்தியாளர்களிடம் கடைக்காரர்கள் கூறினர்.

இரவில்தான் எலிகள் உலவுகின்றன. குறிப்பாக கடையை மூடிய பிறகும் காலையில் திறக்கும் போதும் எலிகளின் ஆட்டத்தைக் காண முடிகிறது என்று ஒரு கடைக்காரர் தெரிவித்தார்.

சில இடங்களில் காணப்படும் எலிகளின் கழிவுகளை சுத்தம் செய்வது சிரமமாக இருப்பதாக மற்றொரு கடைக்காரர் சொன்னார்.

உணவு தயாரிப்பதற்கான பொருள்களை கடைக்காரர்கள் குளிர்பதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாப்பது வழக்கம்.

இருந்தாலும் எலிப் பிரச்சினைகள் ஓயாததால் கிளமெண்டி நகர கடைக்காரர்கள் சங்கம், எலி பிடிக்கும் திட்டத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது.

சிறிய எலியாக இருந்தால் 3 வெள்ளியும் பெருச்சாளியாக இருந்தால் 100 வெள்ளி வரையிலும் வெகுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஷின் மின் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் கௌரவத் தலைவர் சியு சோங் யூ, எலிக்கு வெகுமதி திட்டம் தொடர்ந்து 3வது ஆண்டாக நடைபெறுவதாகத் தெரிவித்தார்.

எலி பிடித்தவர்களுக்கு பரிசு அளிக்கப்படும் படங்களையும் சங்கம் காட்டியது.

ஒரு சிறிய கூடையில் சில குட்டி எலிகளைப் பிடித்து வந்தவருக்கு சிறிய தொகை வழங்கப்பட்டது. ஏறக்குறைய ஒரு கிலோ எடை கொண்ட எலியைப் பிடித்த மற்றவர்கள் 100 வெள்ளி வரை வெகுமதி பெற்றனர்.

குறிப்புச் சொற்கள்