விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடந்துகொள்வோரை மட்டுமே பாராட்டாமல், அவ்விதிகளைத் தக்க சமயத்தில் மீறுவோரையும் திருத்தி எழுதுவோரையும் நிறுவனங்கள் பாராட்ட வேண்டும் என்று சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் சுகாதார அமைச்சருமான ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
அப்போதுதான் விரைவாக மாறிவரும் போட்டித்தன்மைமிக்க உலகில் வெற்றிகாணத் தேவையான புத்தாக்கம் வளரும் என்று திரு ஓங் கூறினார்.
தாம் அரசாங்க ஊழியராகச் சேர்ந்தபோது இன்று இருக்கும் அளவுக்கு விதிமுறைகள் இல்லை என்றும் இப்போது எத்தனையோ விதிமுறைகள் இருப்பதால் அவற்றைச் சுருக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
“ஆனால், பல்லாண்டுகளாகச் சேர்ந்த விதிகள் என்பதால் அவற்றை எளிதில் மாற்ற முடியாது. (வர்த்தகம் சார்ந்த) விதிகளை நிறுவனங்களுடன் இணைந்து ஆராயவேண்டும்,” என்று அவர் சொன்னார்.
எப்போது துணிவையும் வளங்களையும் பயன்படுத்துவது, எதைக் காப்பது, எதை மாற்றுவது என்பது இன்றைய தலைமுறை சிங்கப்பூரர்களுக்கான மிகப் பெரிய சவால்களில் ஒன்று என்றார் அமைச்சர்.
“நம் முன்னோடித் தலைமுறையினர் கிட்டத்தட்ட ஏதுமின்றித் தொடங்கினர். இழப்பதற்கு எதுவுமற்ற நிலையில் துணிவுடன் இலட்சியத்தை நோக்கிப் பயணம் செய்தனர். ஆனால் இன்றோ, வளர்ந்த நாடான சிங்கப்பூருக்கு இழப்பதற்கு நிறைய உண்டு. அதனால் முந்தைய தலைமுறை சேமித்ததை நாம் வீணாக்கக்கூடாது. ஆனால், அத்துடன் நின்றுவிடவும் முடியாது,” என்றார் அமைச்சர் ஓங்.
அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக, பள்ளியில் ‘ஸ்டிரீமிங்’கை அறிமுகப்படுத்தியதும் அது மாணவர்களிடத்தில் மன உளைச்சலை அதிகரித்ததால் பின்னர் அதை நிறுத்திவிட்டு, மாணவர்கள் தங்கள் திறனுக்கேற்ப பாடங்களைப் படிக்கும்படி கட்டமைப்பை மாற்றியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“ஒவ்வொரு துறையிலும், சமுதாயக் கொள்கைகள் ஒவ்வொன்றிலும் மாற்றங்கள் தேவை,” என்றார் திரு ஓங்.
தொடர்புடைய செய்திகள்
பெருங்கவலையும் பேரிலக்கும்
சிங்கப்பூரின் சுகாதாரத் தேவைகளுக்கேற்ப மருத்துவ வசதிகளைக் கட்டமுடியுமா என்பது தம்முடைய பெருங்கவலை என்றும் அதே நேரம், மக்கள் நல்ல உடல்நலத்துடன் வாழும் காலத்தை நீட்டிப்பது தம்முடைய பேரிலக்கு என்றும் அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.
“சுகாதாரச் செலவினம் நம் நாட்டின் பொருளியலை முடக்கிவிடக்கூடாது என முன்னாள் சுகாதார அமைச்சர் ஒருவர் என்னிடம் கூறினார். சில நாடுகளில் அப்படித்தான் நடக்கிறது,” என்றார் அவர்.
சிங்கப்பூரில் சுகாதார மானியம் வழங்கப்படுவதனாலேயே அதிகமானோர் மருத்துவ உதவியை நாடக்கூடும் என்றும் அவர் சொன்னார்.
இன்று இளம் தலைமுறையினரிடையே தாதிமைத் துறையில் நாட்டம் உள்ளது என்றும் மாணவர்களில் 6 முதல் 8 விழுக்காட்டினர் தாதிமைத் துறையை எதிர்காலத்தில் தேர்வுசெய்ய விரும்புகின்றனர் என்றும் திரு ஓங் தெரிவித்தார். எனினும், இது போதவில்லை என்பதால்தான் வெளிநாட்டுத் தாதியர் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
“சிங்கப்பூரர்கள் எவ்வளவுதான் வரவேற்கும் தன்மை உடையோராக இருந்தாலும், அளவுக்கதிகமான வெளிநாட்டவர் சிங்கப்பூருக்குள் வரும்போது சிங்கப்பூரர்களுக்கு மனச்சலனம் ஏற்படலாம்.
“அதனால், பெரும்பான்மைத் தாதியர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகளாகத்தான் இருப்பர்,” என்று அவர் விளக்கினார்.
தாதிமைத் துறைக்குப் பலரை ஈர்க்க, ஊதியம் போட்டித்தன்மை மிக்கதாக இருக்கவேண்டும் என்ற அமைச்சர், சிங்கப்பூரர்கள் தொடர்ந்து சுகாதார ஊழியர்களை மதிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
‘பொருளியலின் உயிர்மூச்சு’
உலக வணிகச் சூழல் எவ்வளவு மாறினாலும், சாங்கி விமான நிலையமும் சிங்கப்பூர்த் துறைமுக ஆணையமும் உலகின் வெவ்வேறு பகுதிகளுடன் ஏற்படுத்தும் இணைப்புகள்மூலம் வணிகங்களுக்குப் பயனளிப்பதாகத் திரு ஓங் குறிப்பிட்டார்.
“அவை இரண்டும் நம் பொருளியலின் உயிர்மூச்சு,” என்றார் அவர்.
உலகின் விநியோகச் சங்கிலிகளை இணைக்கும் தளமாகவும், நம்பகத்தக்க மையமாகவும், நீடித்த நிலைத்தன்மைமிக்க வளர்ச்சிக்கான முன்னுதாரணாகவும், புத்தாக்கத்துக்கான உறைவிடமாகவும் சிங்கப்பூர் எதிர்காலத்தில் திகழும், என்றார் அவர்.
‘மரபைக் கைவிட்டுவிடாதீர்கள்’
அக்காலத்தில் கம்பத்து வீடுகளில் வாழ்ந்தபோது வாழ்க்கை எளிமையாக இருந்தது. ஒவ்வொருவருக்கும் பிறரைத் தெரியும். என் அத்தைகள் நிறைய உணவு சமைப்பர். இது என்னுடையதுதான் என்ற சிந்தனை இல்லை.
இன்று நாம் வளர்ந்த நாடாக இருப்பினும், அந்தக் கம்பத்து உணர்விற்காக ஏங்குகிறோம். பழைய மரபுகளையும் பண்புகளையும் இழக்கிறோமே என வருந்துகிறோம். சிங்கப்பூரின் எதிர்காலத்தை உருவாக்கும்போது நாம் பழங்காலத்தையும் நிகழ்காலத்தையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ஓங் வலியுறுத்தினார்.