இந்தியா - பாகிஸ்தான் பூசல் எதிரொலி

அரிசி இறக்குமதியில் பிரச்சினை ஏற்படலாம்: மலேசியா

1 mins read
0c010020-883f-4240-918a-0cd9fdf2e8de
மலேசியாவில் இறக்குமதியாகும் அரிசியில் 40 விழுக்காடு இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து வருபவை. - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: இந்தியா-பாகிஸ்தான் பூசலால் அரிசி இறக்குமதியில் பிரச்சினை ஏற்படலாம் என்று மலேசியா எச்சரித்துள்ளது.

அரிசி தொடர்பான இறக்குமதிக்கு தென்கிழக்காசிய நாடுகள் இந்தியா மற்றும் பாகிஸ்தானை அதிக அளவில் சார்ந்திருக்கின்றன. தற்போது அவை வேறு நாடுகளை அணுக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்று மலேசியா அக்கறை தெரிவித்துள்ளது.

மலேசியாவில் இறக்குமதியாகும் அரிசியில் 40 விழுக்காடு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வருபவை.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான ராணுவத் தாக்குதல்களினால் அந்நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் இறக்குமதிகளில் தற்போது பாதிப்பு ஏதும் ஏற்படாது எனக் கருதுகின்றனர் லிட்டில் இந்தியா வணிகர்கள்.

லிட்டில் இந்தியா வணிகர்களுக்கு மளிகைப் பொருள்களை விநியோகிக்கும் யூச்சுவான் டிரேடிங் மேலாளர் சிவகுருநாதன், 53, “ஏதேனும் போர் மூண்டால்தான் இறக்குமதிப் படிப்படியாகத் தடையாகும். இந்தியாவிலிருந்துதான் பெரும்பாலான உணவுப் பொருள்கள் இறக்குமதியாகின்றன. பாகிஸ்தானிலிருந்து வருவது பெரும்பாலும் உருளைக்கிழங்குகள்தான்,” என்றார்.

பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்றார் ஸ்ரீ விநாயகா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனர் ஜோதி மாணிக்கவாசகம்.

“இரு நாடுகளும் ஏதேனும் ஏற்றுமதித் தடைகள், வரிகள் வைத்தால்தான் பாதிப்பு வரும். பாகிஸ்தானிலிருந்து வரும் பொருள்கள் இந்தியா வழியாக வந்தால் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வடஇந்தியா பாதுகாப்புக் காரணமாகத் துறைமுகங்கள், சாலைகளை மூடினாலும் இறக்குமதிகளில் தாமதம் ஏற்படக்கூடும்,” என்றார் அவர்.

கூடுதல் செய்தி: ரவி சிங்காரம்

குறிப்புச் சொற்கள்