அரிசித் தட்டுப்பாடு: ஈரான் போர், எல் நினோ எதிரொலி

அரிசித் தட்டுப்பாடு: ஈரான் போர், எல் நினோ எதிரொலி

2 mins read
aad66256-af96-41b6-aafe-79baee912b96
உரப் பற்றாக்குறை, ஈரான் போரால் அதிகரிக்கும் எரிபொருள் கட்டணம், எல் நினோ நிகழ்வு ஆகியவற்றால் 2026ஆம் ஆண்டில் அரிசி விளைச்சல் குறையும் எனக் கருதப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

ஆசிய விவசாயிகள் நெல் பயிரிடும் பரப்பளவைக் குறைத்துள்ள நிலையில் அரிசி விளைச்சல் இந்த ஆண்டில் (2026) வீழ்ச்சி காணும் என்று கருதப்படுகிறது.

உரப் பற்றாக்குறை, ஈரான் போரால் அதிகரிக்கும் எரிபொருள் கட்டணம் ஆகிய காரணங்களால் அவர்கள் குறைந்த பரப்பளவில் நெல்லைப் பயிரிடுகின்றனர். எல் நினோ நிகழ்வால் அரிசி விளைச்சல் பாதிக்கப்படும் என்ற அச்சமும் இதற்கு மற்றொரு காரணம்.

உலகளாவிய நிலையில் உணவுப் பாதுகாப்பில் அரிசி முக்கியத்துவம் வகிக்கிறது. அரிசி விநியோகத்தில் ஏற்படக்கூடிய மிகக் சிறிய இடையூறுகூட ஆசியா, ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் விலையேற்றம், குடும்பங்களின் வரவுசெலவில் பற்றாக்குறை எனப் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தும்.

ஐக்கிய நாட்டு நிறுவன உணவு, வேளாண் அமைப்பு, ஏப்ரல் மாதம் வெளியிட்ட முன்னுரைப்பில் 2025-26ல் அரிசி விளைச்சல் இரண்டு விழுக்காடு அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஈரான் போரால் தாய்லாந்து, வியட்னாம் போன்ற அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளிலும் அரிசி இறக்குமதியைச் சார்ந்த பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா போன்ற நாடுகளிலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். போரால் எரிபொருள், உரம் ஆகியவற்றின் விநியோகம் தடைபட்டுள்ளது.

இதற்கிடையே, தென்கிழக்காசிய விவசாயிகளின் கவலையைக் கூட்டும் விதமாக எல் நினோ வானிலை நிகழ்வால் இந்த ஆண்டின் பிற்பாதியில் இவ்வட்டாரத்தில் வெப்பமும், வறட்சியும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

ஆசியாவில் அரிசி விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். அரிசி மூட்டைகளுக்கான பாலிதீன் பைகளின் தட்டுப்பாடு, துறைமுகங்களுக்கு அரிசியை ஏற்றிச்செல்லப் போதிய எண்ணிக்கையில் லாரிகள் கிடைக்காதது, கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறு ஆகியவற்றை அவர்கள் சுட்டினர்.

உலகின் ஆகப் பெரிய அரிசி இறக்குமதி நாடான பிலிப்பீன்சில் விவசாயிகள் சிலர் பயிரிடப் போவதில்லை என்றோ உரப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளப் போவதாகவோ கூறுகின்றனர். இதனால் நெல் விளைச்சல் கணிசமாகக் குறையும் என்பதை கவனிப்பாளர்கள் சுட்டினர்.

இந்தோனீசியாவில் உரம் கிடைத்தபோதும் எல் நினோ நிகழ்வால் விளைச்சல் பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. மார்ச்-மே காலகட்டத்தில் அறுவடை 10 விழுக்காடு சுருங்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், உலகின் ஆகப்பெரிய அரிசி ஏற்றுமதி நாடான இந்தியாவில் அரிசி உற்பத்தி பாதிக்கப்படாது என்று அமெரிக்க வேளாண் துறைத் தரவுகள் கூறுகின்றன.

இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் நிலைமை மேம்பட்டாலும் அரிசி விலை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்