சொத்துகளை வெளிநாடுகளுக்கு மாற்றும் இந்தோனீசிய செல்வந்தர்கள்

1 mins read
9fcea1bb-05d3-41e1-9cf9-69e3ad595278
இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ. - கோப்புப் படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பெரும் செல்வந்தர்கள் தங்களது மில்லியன் டாலர் சொத்துகளை வெளிநாடுகளுக்கு மாற்றி வருகிறார்கள்.

அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் நிதிக் கொள்கை மற்றும் பொருளியல் நிலத்தன்மை ஆகியவற்றின் மீதான கவலையே அவர்களை அவ்வாறு செய்யத் தூண்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தோனீசியாவில் இருக்கும் சொத்துகளை தங்கமாக மாற்றும் அதேநேரம் வெளிநாடுகளின் சொத்துச் சந்தைகளுக்கு அவற்றை மாற்றிவிடுகிறார்கள்.

மின்னிலக்க நாணயம் அவர்களின் மூன்றாவது முதலீட்டுத் தேர்வாக உள்ளது.

இது தொடர்பாக செல்வ வளங்களை நிர்வகிப்போர், தனியார் வங்கிகளைச் சேர்ந்தோர், சொத்து ஆலோசகர்கள் பெரும் செல்வங்களுக்கு அதிபதியாக உள்ளோர் போன்றோரை புளூம்பெர்க் ஊடகம் சந்தித்தது.

சொத்து தொடர்பான விவகாரங்கள் ரகசியமானவை என்பதால் அவர்கள் தங்களது பெயரை வெளியிட வேண்டாம் என்று அந்த ஊடகத்திடம் கேட்டுக்கொண்டனர்.

இந்தோனீசியாவில் உள்ள தமது வங்கியில் US$100 மில்லியனுக்கும் (S$132.6 மில்லியன்) and US$400 மில்லியனுக்கும் இடைப்பட்ட பணத்தை வைத்துள்ள ஏராளமான வாடிக்கையாளர்கள் அதில் 10 விழுக்காடு வரை மின்னிலக்க நாணயத்தில் முதலீடு செய்திருப்பதாக தனியார் வங்கியைச் சேர்ந்த ஒருவர் புளூம்பெர்க்கிடம் கூறினார்.

சொத்துகளை வெளிநாடுகளில் உள்ள முதலீடுகளுக்கு மாற்றிவிடும் போக்கு கடந்த அக்டோபர் மாதம் திரு பிரபோவோ அதிபர் பதவிக்கு வந்தது முதலே தொடங்கிவிட்டது.

கடந்த மார்ச் மாதம் இந்தோனீசிய நாணயமான ருப்பியாவின் மதிப்பு சரிவடைந்ததைத் தொடர்ந்து சொத்துகளை மாற்றும் போக்கு வேகமடைந்தததாக அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்