சிங்கப்பூரின் நீதித்துறையை பிரான்சன் அவமதித்துள்ளார்

2 mins read
4cf84240-7d38-42a0-8b84-dc4cdaff3fef
படம்: சமூக ஊடகம் -

சிங்கப்பூரின் நீதித்துறையை பிரிட்டிஷ் செல்வந்தர் ரிச்சர்ட் பிரான்சன் அவமதித்திருப்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் தொடர்பாக அவர் தெரிவித்திருத்திருந்த கருத்துகளை அமைச்சு சுட்டியது.

சிங்கப்பூரில் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் மரண தண்டனைக்கு எதிராக திரு பிரான்சன் தமது வலைத்தளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

1017.9 கிராம் கஞ்சா கடத்தியதற்காக சிங்கப்பூரரான 46 வயது தங்கராஜு சுப்பையாவுக்கு 2018ஆம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தங்கராஜுவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்திவைக்க தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் நேற்று முன்தினம் நிராகரித்தது.

தங்கராசு சுப்பையா ஏன் இறக்கக்கூடாது எனும் தலைப்பில் திரு பிரான்சன் வலைத்தளத்தில் தமது கருத்துகளைப் பதிவிட்டார்.

"தங்கராசு சுப்பையா தொடர்பான வழக்கைப் பற்றி விவாதிக்கும் நோக்கில் அந்த வழக்கைப் பற்றி சிங்கப்பூர் நீதிமன்றத்துக்குத் தெரிந்திருப்பதைவிட தமக்கு அதிகம் தெரியும் என்பது போல கருத்துரைத்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சிங்கப்பூர் நீதிமன்றம் மூன்று ஆண்டுகளுக்கும் அதிகமாக மிக உன்னிப்பாகவும் முழுமையாகவும் ஆராய்ந்துள்ளது.

"திரு பிரான்சனின் இச்செயல் சிங்கப்பூரின் நீதிபதிகளையும் நீதித்துறையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.

"மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு தங்கராஜு குற்றம் புரியவில்லை என்றும் எந்த ஒரு குற்றத்தையும் செய்யாத ஒருவரை சிங்கப்பூர் கொல்ல இருப்பதாகவும் திரு பிரான்சன் தெரிவித்துள்ளார். இது முற்றிலும் உண்மையற்ற வாதம்.

"தங்கராஜு கைது செய்யப்பட்டபோது அவரிடம் போதைப்பொருள் இல்லை என்று வாதிடப்படுகிறது. ஆனால் போதைப்பொருளைக் கடத்தும் நோக்குடன் அதன் விநியோகத்தை அவர்தான் ஒருங்கிணைத்தார் என்பதை ஆதாரங்கள் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன," என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது.

கஞ்சா விநியோகத்தில் ஈடுபட்ட இருவருடன் தொடர்புகொள்ள தங்கராஜுவின் தொலைபேசி எண் பயன்படுத்தப்பட்டதை அமைச்சு சுட்டியது.

அந்த இருவருடன் தாம் தொடர்புகொள்ளவில்லை என்று தங்கராஜு தெரிவித்தது நம்பக்கூடியதாக இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.

தங்கராஜு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதை நிரூபிப்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக உயர் நீதிமன்றம் கூறியது.

உயர் நீதிமன்றம் சரியான தீர்ப்பு அளித்ததாக பிறகு மேல்முறையீட்டு நீதிமன்றமும் தெரிவித்ததாக உள்துறை அமைச்சு கூறியது.

உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நிதிமன்ற வழக்கு விசாரணைகளின்போது தங்கராஜுவை அவரது வழக்கறிஞர் பிரதிநிதித்துத் தற்காத்து வாதிட்டதாக அமைச்சு தெரிவித்தது.

சிங்கப்பூர் விதிக்கும் மரண தண்டனைக்கு எதிராக திரு பிரான்சன் கருத்து தெரிவித்திருப்பது இது முதல்முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்