கோலாலம்பூர்: சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்திருப்பதால், ஜோகூர் பாருவுக்குச் சென்று செலவிடுவது பற்றி சிங்கப்பூர் வாடிக்கையாளர்கள் மறுபரிசீலனை செய்யக்கூடும்.
ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து, S$1க்கு 3 ரிங்கிட்டுக்கும் கீழ் என்ற நிலையை எட்டுமா என்பது குறித்து ஊகம் எழுந்துள்ளது. கடைசியாக 2020 பிப்ரவரியில் இந்த நிலையை ரிங்கிட் எட்டியிருந்தது. அப்போது S$1க்கு 2.90 ரிங்கிட் என்ற அளவில் அது இருந்தது.
ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவாக இருந்தால், நாட்டின் சுற்றுப்பயணத் துறையையும் பொருளியல் கண்ணோட்டத்தையும் அது பாதிக்குமோ என்ற பேச்சும் எழுந்துள்ளது.
இது ஆரம்பகட்டமே என்பதால், ரிங்கிட்டின் எழுச்சி எவ்வளவு காலத்துக்கு நிலைத்திருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். முன்னோக்கிப் பார்க்கையில், நாணய மாற்று விகிதம் ஏறி இறங்கும் எனப் பெரும்பாலான வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிங்கப்பூர் வங்கி நிதிப் பகுப்பாய்வாளர் சிம் மோ சியோங், “அடிக்கடி ஜோகூர் பாருவுக்குச் சென்றுவரும் சிங்கப்பூரர்கள், ரிங்கிட் வலுவடைந்து வருவதன் தாக்கத்தை உணரக்கூடும். முன்பு வாங்கிய அதே பொருள்களுக்குக் கூடுதல் செலவிட வேண்டியிருப்பதை அவர்கள் கண்டறிவர்,” என்றார்.
2024 ஜனவரி 1ஆம் தேதி, சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகராக ரிங்கிட்டின் மதிப்பு 3.48ஆக இருந்தது. பிப்ரவரி 21ஆம் தேதி, அது முன்னெப்போதும் இல்லாத அளவாக 3.57 எனச் சரிந்திருந்தது. தற்போது அது ஏறத்தாழ 3.22 என நிலைக்கு கிட்டத்தட்ட 10 விழுக்காடு வலுப்பெற்றுள்ளது.
டிபிஎஸ் வங்கியின் மூத்த நாணயப் பரிவர்த்தனை பகுப்பாய்வாளர் ஃபிலிப் வீ, ரிங்கிட்டுக்கு எதிராக சிங்கப்பூர் வெள்ளியின் வீழ்ச்சி, “2005க்குப் பிறகு ஆக மோசமானது” என வருணித்தார்.
‘சம்பளக் குறைப்பு’
ரிங்கிட் வலுவடைந்திருப்பதன் தாக்கத்தைப் பலரும் தனிப்பட்ட வகையில் உணர்ந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
மலேசியாவில் தளம் கொண்டுள்ள சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்காக பணிபுரியும் மலேசிய தர்சார்பு வடிவமைப்பாளர் டெபி லியோங், முன்பு ரிங்கிட் வலுவிழந்திருந்தபோது பலனடைந்தார்.
ஈராண்டுகால ஒப்பந்தத்தில் பணிபுரியும் அவரின் மாதச் சம்பளம் S$3,500. அதை ரிங்கிட்டுக்கு மாற்றி தன் மலேசிய வங்கிக் கணக்கில் அவர் வரவு வைத்துக்கொள்கிறார்.
“நான் பணியில் சேர்ந்தபோது, நாணய பரிவர்த்தனை விகிதம் S$1க்கு ஏறக்குறைய RM3 என நிலையில் இருந்தது. ரிங்கிட் வலுவிழந்தபோது, என் மாதச் சம்பளம் ஏறக்குறைய RM12,200ஆக (S$3,790) உயர்ந்தது. எனக்குச் சம்பள உயர்வு கிடைத்ததுபோல இருந்தது,” என்று பிஸ்னஸ் டைம்சிடம் அவர் கூறினார்.
இப்போது நிலைமை மாறிவிட்டதாக அவர் உணர்கிறார். அவரது ஆக அண்மைய சம்பளம் RM11,200ஆக இருந்தது.
“ரிங்கிட் வலுவடைந்து வருவதால் என் வருமானம் தொடர்ந்து குறையுமோ என்ற கவலை எனக்கு உள்ளது. அது, 2020ல் இருந்த நிலைக்குத் திரும்பினால், சம்பளம் குறைக்கப்பட்டதுபோல ஆகிவிடும்,” என்றார் டெபி.