சிங்கப்பூரில் ‘ஹியூமன் மெட்டாநிமோவைரஸ்’ (HMPV) என்னும் மனித அணுமாற்ற நுரையீரல் கிருமி பரவிய சம்பவங்கள் 2024 ஆண்டிறுதியில் அதிகரித்ததற்கு சமூக ஒன்றுகூடல்களும் விடுமுறைப் பயணங்களும் காரணமாக இருக்கலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது.
எச்எம்பிவி சம்பவங்கள் அதிகரிப்பு தொடர்பாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய வினாக்களுக்கு அமைச்சு பதில் அளித்துள்ளது.
ஆண்டிறுதியில் ஒன்றுகூடல்கள் அதிகரிப்பது வழக்கமானது என்பதால், அப்போது இங்குள்ளோரிடம் எடுக்கப்பட்ட கடும் சுவாசத் தொற்று (ARI) மாதிரிகளில் வாராந்தர எச்எம்பிவி தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்ததைக் காணமுடிந்ததாக அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
ஆண்டின் இதர மாதங்களில் அந்தத் தொற்றின் வாராந்தர விகிதம் 0.8 விழுக்காட்டுக்கும் 9 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டு இருந்தது.
2024 டிசம்பர் மாதம் அது 5.5 விழுக்காட்டுக்கும் 9 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டதாக அதிகரித்தது என்றார் அவர்.
எச்எம்பிவி என்பது சாதாரணமாகப் பரவக்கூடிய ஒரு சுவாசக் கிருமி என்று அமைச்சு தெரிவித்து உள்ளது. சளிக்கான அறிகுறிகளைக் கொண்டிருக்கும் அந்தக் கிருமியால் ஏற்படும் தொற்று தாமாகவே சரியாகக்கூடியது. அதற்குக் குறிப்பிட்டதொரு சிகிச்சை தேவைப்படலாம் அல்லது தேவைப்படாமலும் போகலாம் என்றும் அது விளக்கி உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில், நல்ல சுகாதாரப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டு உள்ளது.
கைகளை அடிக்கடி கழுவுதல், தும்மல் மற்றும் இருமலின்போது வாயையும் மூக்கையும் மூடிக்கொள்ளுதல், பயன்படுத்திய மெல்லிழைத் தாள்களை (tissues) முறையாக அப்புறப்படுத்துதல் போன்றவை அந்தப் பழக்கவழக்கங்கள் என்றும் அது குறிப்பிட்டு உள்ளது.