சிங்கப்பூரில் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில், தனியார் வீடுகளின் வாடகை 0.7 விழுக்காடு அதிகரித்துள்ளது.
அதே வேளையில், தனியார் வீடுகளின் விற்பனை விலையும் 0.5 விழுக்காடு உயர்ந்துள்ளது என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் (யுஆர்ஏ) வெள்ளிக்கிழமை (ஜூலை 24) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதே இரண்டாம் காலாண்டில் காலியான வாடகை வீடுகளின் விழுக்காடு 6.4 விழுக்காடு உயர்ந்தபோதிலும் இந்த ஏற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் 1,212 புதிய தனியார் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 512 இசி எனப்படும் ‘எக்ஸ்சிகியுட்டிவ் கன்டோமினியம்’ கூட்டுரிமை வீடுகளும் 512 தனியார் குடியிருப்புகளும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
தரைவீடுகளுக்கான வாடகை 2.7 விழுக்காடு உயர்ந்துள்ளது. முந்தைய காலாண்டைவிட அது 0.1 விழுக்காடு அதிகமாகும்.
மத்திய பகுதியின் நிலவரம்
தீவின் முக்கிய வட்டாரங்களில் குறிப்பாக மத்திய பகுதியில் உள்ள தரைவீடு அல்லாத வீடுகளின் வாடகை மற்ற பகுதிகளைவிட 1.2 விழுக்காடு உயர்ந்தது. முதல் காலாண்டில் அது 0.5 விழுக்காடு உயர்ந்திருந்தது.
நகரின் மத்திய வட்டாரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளின் வாடகை ஒரே நிலையில் இருந்தது. அது முதல் பாதியில் 0.2 விழுக்காடு சரிந்திருந்தது.
நகருக்கு அருகில் உள்ள கூட்டுரிமை வீடுகளின் வாடகை 0.3 விழுக்காடு நிலைபெற்றது. முந்தைய காலாண்டில் அது 1 விழுக்காடு உயர்ந்திருந்தது.
இரண்டாம் காலாண்டுக்கான தனியார் வீட்டுச் சந்தையில் மேம்பாட்டாளர்கள் 1,783 புதிய வீடுகளை அறிமுகப்படுத்தினர். முதல் காலாண்டில் விற்பனைக்கு வந்த 1,844 வீடுகளைவிட அது 3 விழுக்காடு குறைவாகும். இருப்பினும் 2,141 வீடுகள் இரண்டாம் காலாண்டில் விற்பனை செய்யப்பட்டன.

