பொதுவான ஊதிய உயர்வைவிட ஐந்து மடங்கு வேகமாக அதிகரிக்கும் ‘ஏஐ’ சம்பளம்

பொதுவான ஊதிய உயர்வைவிட ஐந்து மடங்கு வேகமாக அதிகரிக்கும் ‘ஏஐ’ சம்பளம்

2 mins read
c99d336f-070c-4272-ab8b-b948828b15b3
கடந்த ஓராண்டில் மட்டும் இங்கு ‘ஏஐ’ சார்ந்த பணிகளுக்கான சம்பளம் 15 முதல் 25 விழுக்காடுவரை உயர்ந்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலகெங்கும் உள்ள பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை நியாயப்படுத்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைக் காரணம் காட்டி வரும் வேளையில், சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவு கைமேல் பலனளித்து வருகிறது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்களுக்கான சம்பளம் வழக்கமான ஊதிய உயர்வைவிட ஐந்து மடங்கு வேகமாக அதிகரித்து வருகிறது.

கடந்த ஓராண்டில் மட்டும் இங்கு ‘ஏஐ’ சார்ந்த பணிகளுக்கான சம்பளம் 15 முதல் 25 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதுடன், புதிய ஊழியர்களுக்கான ஆரம்பகால ஆண்டுச் சம்பளம் $70,000 முதல் $90,000 வரை உள்ளதாக ராபர்ட் வால்டர்ஸ் ஆட்சேர்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் நடப்பாண்டில் ‘ஏஐ’ மற்றும் தரவு சார்ந்த பணிகளுக்கே முன்னுரிமையும் அதிக தேவையும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அந்த நிறுவனத்தின் சிங்கப்பூர்ப் பிரிவு மேலாளர் கிர்ஸ்டி போல்டாக், நிறுவனங்கள் ‘ஏஐ’ தொழில்நுட்பத்தை வெறும் சோதனையாகப் பார்க்காமல் தங்களது வணிக நடவடிக்கைகளில் பெரிய அளவில் செயல்படுத்தப் போட்டியிட்டு வருவதாகக் கூறினார்.

குறிப்பாக, சீன மற்றும் அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் சிங்கப்பூரை மையமாகக் கொண்ட வேலைவாய்ப்புகளைப் பேரளவில் அதிகரித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கடந்த மே மாதம் 20ஆம் தேதியன்று அமெரிக்காவின் ‘ஓப்பன்ஏஐ’ நிறுவனம் சிங்கப்பூரின் பயன்பாட்டுச் செயற்கை நுண்ணறிவுத் துறையை மேம்படுத்த $300 மில்லியனுக்கும் அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளது.

இதன்மூலம் அடுத்த சில ஆண்டுகளில் சிங்கப்பூரில் 200க்கும் மேற்பட்ட புதிய தொழில்நுட்பப் பணியிடங்கள் உருவாக்கப்படவுள்ளன.

அதேபோல, அதன் போட்டி நிறுவனமான ‘ஆந்த்ரோப்பிக்’ மற்றும் சீனாவின் ‘அலிபாபா’ ஆகியவையும் சிங்கப்பூரில் தங்களின் ஆட்சேர்ப்பு மற்றும் கண்டுபிடிப்பு மையங்களை விரிவுபடுத்தி வருகின்றன. சீன நிறுவனங்கள் ‘ஏஐ’ ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்புத் திறன்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன.

சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகங்களின் முனைவர் பட்டதாரிகளை ஆண்டுக்கு அதிக சம்பளத்துடன் ஈர்த்து வருகின்றன. எனினும், சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் வணிகமயமாக்கல், உற்பத்தித்திறன் மேம்பாடு, வாடிக்கையாளர் மனநிறைவு போன்றவற்றுக்கே முன்னுரிமை அளிப்பதால், ‘ஏஐ’ துறையில் நுழைவதற்கு எப்போதும் முனைவர் பட்டம் கட்டாயமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. திறனாளர் பற்றாக்குறை நிலவுவதால் தகுதியானோரைக் கண்டறிந்து பணியமர்த்த நிறுவனங்களுக்குக் கூடுதல் காலம் தேவைப்படுகிறது.

இதைக் கருத்தில்கொண்டு, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும் அவற்றின் ‘ஏஐ’ சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலை பட்டக் கல்விக்கான மாணவர் சேர்க்கையைக் கணிசமாக அதிகரித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுவேலைசம்பளம்பட்டக் கல்வி