ஏப்ரலில் பணவீக்கக் கணிப்பை மாற்றியமைக்கும் சிங்கப்பூர் நாணய ஆணையம்

எரிசக்தி விலை ஏறுமுகம்

ஏப்ரலில் பணவீக்கக் கணிப்பை மாற்றியமைக்கும் சிங்கப்பூர் நாணய ஆணையம்

2 mins read
f89ec72b-6165-49d5-9d13-572545cfa4f2
2026ல் சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கமும் ஒட்டுமொத்தப் பணவீக்கமும் சராசரியாக 1 விழுக்காடு முதல் 2 விழுக்காட்டிற்குள் இருக்கும் என்று நாணய ஆணையம் கணித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், சிங்கப்பூரின் பணவீக்கக் கணிப்பு குறித்த புதிய தகவல்களை தனது ஏப்ரல் மாத நாணயக் கொள்கை அறிக்கையில் சிங்கப்பூர் நாணய ஆணையம் வெளியிடவுள்ளது.

சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய கிழக்கில் நீடித்துவரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விலைகள் கடந்த சில வாரங்களில் கணிசமாக அதிகரித்துள்ளன.

“இதன் விளைவாக, சிங்கப்பூரின் இறக்குமதிச் செலவு அழுத்தங்கள் குறுகிய காலத்தில் அதிகரிக்கக்கூடும்,” என்று குறிப்பிட்டுள்ளன.

2026ல் சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கமும் ஒட்டுமொத்தப் பணவீக்கமும் சராசரியாக 1 விழுக்காடு முதல் 2 விழுக்காடிற்குள் இருக்கும் என்று ஆணையம் தற்போது கணித்துள்ளது.

சிங்கப்பூரின் பயனீட்டாளர் விலைக் குறியீடு குறித்து திங்கட்கிழமை (மார்ச் 23) வெளியிடப்பட்ட மாதாந்தரக் கூட்டறிக்கையில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஈரான் போர் மூள்வதற்கு முன்பே, பிப்ரவரியில் அடிப்படைப் பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் 1.4 விழுக்காடாக உயர்ந்தது. இது ஜனவரியில் 1 விழுக்காடாக இருந்தது. டிசம்பர் 2024க்குப் பிறகு பதிவான ஆக அதிக பணவீக்க விகிதம் இது.

இருப்பினும், பிப்ரவரியின் ஒட்டுமொத்தப் பணவீக்கம், ஜனவரியில் இருந்த 1.4 விழுக்காட்டிலிருந்து 1.2 விழுக்காடாகக் குறைந்தது.

துறைசார்ந்த பணவீக்க மாற்றங்கள்

மின்சார, எரிவாயுப் பணவீக்கம், ஜனவரியில் சரிந்த 4.2 விழுக்காட்டுடன் ஒப்புநோக்க, பிப்ரவரியில் 4.3 விழுக்காடு குறைந்தது.

உணவுப் பொருள்களின் பணவீக்கம், ஜனவரியில் இருந்த 1.2 விழுக்காட்டிலிருந்து 1.6 விழுக்காடாக அதிகரித்தது.

சில்லறை விற்பனை, பிற பொருள்களுக்கான பணவீக்கம் ஜனவரியில் இருந்த 0.5 விழுக்காட்டிலிருந்து 0.6 விழுக்காடாக உயர்ந்தது.

விமானப் பயணச்சீட்டுக் கட்டணமும் விடுமுறைக்காலச் செலவுகளும் அதிகரித்ததால், சேவைத் துறையில் பணவீக்கம் ஜனவரியில் இருந்த 1.5 விழுக்காட்டிலிருந்து 2 விழுக்காடாக அதிகரித்தது.

தங்குமிடப் பணவீக்கம் ஜனவரியில் இருந்த 1.9 விழுக்காட்டிலிருந்து 0.3 விழுக்காடாகக் குறைந்தது.

தனியார் போக்குவரத்துப் பணவீக்கம் ஜனவரியில் இருந்த 2.7 விழுக்காட்டிலிருந்து 2.4 விழுக்காடாகக் குறைந்தது.

குறிப்புச் சொற்கள்