ஹலால் முத்திரையை நாடும் உணவகங்கள் அதிகரிப்பு

ஹலால் முத்திரையை நாடும் உணவகங்கள் அதிகரிப்பு

2 mins read
7431acef-7f59-47f5-86a5-838648e3fb1e
கனடிய உணவகமான டிம் ஹார்டன்ஸ் இவ்வாண்டு பிப்ரவரியில் ஹலால் சான்றிதழைப் பெற்றது. - படம்: டிம் ஹார்டன்ஸ் சிங்கப்பூர்

சிங்கப்பூரில் ஹலால் தகுதியைப் பெறும் உணவகங்களின் எண்ணிக்கை அண்மைய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.

தீவெங்கும் உள்ள 23,600க்கும் அதிகமான உணவுக் கடைகளில் 4,000க்கும் அதிகமானவை ஹலால் முத்திரையைக் கொண்டுள்ளன.

இந்நிலையில், ஒவ்வோர் ஆண்டும் ஹலால் சான்றிதழைப் பெறும் உணவகங்களின் எண்ணிக்கை 10 விழுக்காடு உயர்வதாகச் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) குறிப்பிட்டது.

ஜப்பானிய, கொரிய உணவகங்களும் ஹலால் முத்திரையைப் பெற ஆர்வம் காட்டிவருகின்றன.

ஆனால் ஹலால் சான்றிதழைப் பெறுவது அவ்வளவு சுலபமல்ல. பல்வேறு நடைமுறைகளைக் கடந்த பிறகே ஹலால் முத்திரை வழங்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு ஹலால் முத்திரைக்காக அனுப்பப்பட்ட விண்ணப்பங்களில் 75 விழுக்காட்டுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஹலால் முத்திரை இருக்கும்போது இந்தோனீசியா, மலேசியா, புருணை ஆகிய அண்டை நாடுகளிலிருந்துவரும் முஸ்லிம் சுற்றுப்பயணிகளுக்கும் சேவை வழங்க முடிகிறது என்றன உணவகங்கள்.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர்வரை சிங்கப்பூரின் அனைத்துலகச் சுற்றுப்பயணிகளில் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டினர் இந்தோனீசியா, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து வந்தனர்.

அனைத்துலக அளவில் சிறந்த ரொட்டிக் கடையாக இருக்கவேண்டும் என்ற பெரிஸ் பெகட், இவ்வாண்டு பிப்ரவரியில் ஹலால் சான்றிதழைப் பெற்றது.

முஸ்லிம் வாடிக்கையாளர்களுக்கும் சேவை வழங்க அதே மாதம் ஹலால் முத்திரையைப் பெற்றது கனடிய உணவு, பானக் கடையான டிம் ஹார்டன்ஸ்.

அனைவரையும் உள்ளடக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஹலால் முத்திரையைப் பெற முடிவெடுத்ததாக டிம் ஹார்டன்ஸ் தெரிவித்தது.

புகிஸ் ஜங்‌‌‌‌ஷனில் உள்ள டெய்லி சிக்கன் கொரிய உணவகம், சமர்செட்டில் உள்ள லுசின் பை லூனா உணவு, பானக் கடை ஆகியவையும் அதே கருத்தை முன்வைத்தன.

ஹலால் முத்திரையை அறிவித்ததை அடுத்து கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக டெய்லி சிக்கன் உணவகம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்