போதைப்பொருள் குறித்த இளையர்களின் எச்சரிக்கை போக்கு கூடியுள்ளதாக 2025ல் வெளிவந்த தேசிய போதைப்பொருள் கண்ணோட்டக் கருத்தாய்வு குறிப்பிடுகிறது.
கருத்தாய்வின் தகவல்படி,போதைப்பொருளால் தீமை விளைவதாக 87.7 விழுக்காடு இளையர்கள் அறிந்திருப்பதாகக் கருத்தாய்வு குறிப்பிடுகிறது. 2023ல் இத்தகையோர் 83.2 விழுக்காட்டினர் என்றது அந்த ஆய்வு.
வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது பேசிய உள்துறை மூத்த துணையமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம், சிங்கப்பூரின் போதைப்பொருள் சட்டங்களுக்கான ஆதரவு வலுவாக இருப்பதாகவும் கூறினார்.
சிங்கப்பூரிலிருந்து போதைப்பொருள் புழக்கத்தை நிறுத்த கடுமையான சட்டங்கள் தேவை என இளையர்களில் 92.7 விழுக்காட்டினரும் பெரியவர்களில் 96.3 விழுக்காட்டினரும் நினைக்கின்றனர், என்று அவர் கூறினார்.
போதைப்பொருளால் பாதிக்கப்பட்டோருக்கான நினைவு நாள்
போதைப்பொருளால் தங்கள் வாழ்க்கையில் சீர்குலைவைச் சந்தித்தோரை நினைவுகூர்வதற்காகக் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட போதைப்பொருளால் பாதிக்கப்பட்டோருக்கான நினைவு நாளை இந்த ஆண்டுமே கொண்டாடுவதற்கான திட்டங்கள் நடப்பில் இருப்பதாகவும் இணைப் பேராசிரியர் ஃபைஷால் தெரிவித்தார். அத்துடன், மூன்றாண்டுகளுக்கு மேலாகத் தொடரும் ‘அன்இன்ஃப்லுவன்ஸ்ட்’ இயக்கம் இவ்வாண்டும் நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இணைய மற்றும் நேரடி முறையில் உயர்கல்வி மாணவர்களை இந்த இயக்கம் ஈடுபடுத்துகிறது. “போதைப் புழக்கம் குறித்த அவர்களது பார்வையை எந்தெந்த சக்திகள் செதுக்குகின்றன என்பது குறித்து அவர்கள் யோசிக்கும்படி நாங்கள் ஊக்குவிப்போம்,” என்று அவர் கூறினார்.

