கொழுப்புக் கல்லீரலை (Fatty Liver) ஏற்படுத்தும் குறிப்பிட்ட மரபணு மாற்றத்துடன், நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்றவை இணையும்போது, அது கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது என்று சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மரபணு ரீதியான அபாயங்கள் தனித்துச் செயல்படுவதில்லை என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அதே வேளையில், பொதுவாக ‘பீர் தொப்பை' என்று அழைக்கப்படும், உள் உறுப்புகளைச் சுற்றி, குறிப்பாகக் கல்லீரலைச் சுற்றி அதிகப்படியான கொழுப்பு படிந்துள்ள ஆண்களுக்கு, ‘ஹெபடோசெல்லுலர் கார்சினோமா’ எனப்படும் மிகவும் பொதுவான முதன்மைக் கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஒன்பது மடங்கு வரை அதிகமாக உள்ளது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
‘அலிமென்டரி பார்மகாலஜி அண்ட் தெரபியூட்டிக்ஸ்’ என்ற மருத்துவம் தொடர்பான அனைத்துலக இதழில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆசியாவில் கொழுப்புக் கல்லீரல் மரபணு வகைக்கும் கல்லீரல் புற்றுநோய் அபாயத்துக்கும் இடையே உள்ள தெளிவான தொடர்பை நிரூபிக்கும் முதல் பெரிய அளவிலான ஆய்வு இதுவாகும்.
தற்போது சிங்கப்பூரில் வழக்கமான கல்லீரல் புற்றுநோய் பரிசோதனைகளில் மரபணுச் சோதனைகள் சேர்க்கப்படவில்லை. இருப்பினும், இந்தப் புதிய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், வருங்காலத்தில் நோயாளிகளின் மரபணுத் தகவல்களுடன் தற்போதைய மருத்துவத் தரவுகளையும் இணைத்து, அதிக அபாயம் உள்ளோரைக் கண்டறிந்து இலக்குநோக்கிய விரிவான பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவப் பள்ளி, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் புற்றுநோய்க் கழகம், ஏஸ்டார் அமைப்பு, சிங்கப்பூர் மரபணுவியல் கழகம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இணைந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.
1993ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரிலும் உலகளவிலும் புற்றுநோய் மற்றும் நாட்பட்ட நோய்கள் குறித்து ஆய்வு செய்ய உருவாக்கப்பட்டு, ஏறத்தாழ 25,000 பேரை உள்ளடக்கிய ‘சிங்கப்பூர் சீன சுகாதார ஆய்வு’ தரவுகளின் மூலம் இந்த முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் புற்றுநோய் பதிவகத்தின் அண்மைய வருடாந்திர அறிக்கையின்படி , கடந்த 2019 முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், சிங்கப்பூர் ஆண்களின் புற்றுநோய் மரணங்களுக்குக் கல்லீரல் புற்றுநோயே மிக முக்கிய மூன்று காரணங்களில் ஒன்றாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

