நான்கு வயது ஸாரா மெய் ஒர்லிக்கை மோதி அவரின் உடல் மீது காரை ஏற்றிச்சென்ற ஓட்டுநர், அந்தச் சிறுமி சாலையில் ஓடியபோது அவரைப் பார்த்திருக்க முடியாது என்று மரண விசாரணை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஒரு மீட்டர் உயரமுள்ள அந்தச் சிறுமியை, நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்று முற்றிலும் மறைத்ததாக ஸாரா மரணம் தொடர்பான விசாரணையில் தெரியவந்ததாக மரண விசாரணை அதிகாரி எடி தாம் கூறினார்.
ரிவர் வேலியில் உள்ள இன்ஸ்டிடியூஷன் ஹில்லின் முதல் தடத்தில் அந்த வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.
தலையில் கடுமையாகக் காயமுற்ற ஆஸ்திரேலியரான ஸாரா, ஜனவரி 23ஆம் தேதி விபத்து நடந்த சில மணி நேரத்திற்குப் பிறகு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
பாலர் பள்ளியிலிருந்து 32 வயது இந்தோனீசிய இல்லப் பணிப்பெண்ணுடனும், இரண்டு வயது சகோதரியுடனும் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, ஸாரா சாலையில் ஓடினார்.
குழந்தைகளின் பள்ளிப் பைகளைத் தூக்கிக்கொண்டிருந்த பணிப்பெண், இளைய பிள்ளையின் கையையும் பிடித்துக்கொண்டிருந்தார் என்றும் ஸாரா முன்னால் நடந்து சென்றுகொண்டிருந்தார் என்றும் மரண விசாரணை அதிகாரி தாம் கூறினார்.
ஸாரா, இன்ஸ்டிடியூஷன் ஹில்லைத் தாண்டி ஓடியபோது, இடப்பக்கத்திலிருந்து கார் வருவதை அவர் கவனிக்கவில்லை.
“அந்தப் பணிப்பெண் இரண்டாம் தடத்தில் கார் வருவதைப் பார்த்தார். இருப்பினும், அவரால் எதையும் செய்யமுடியவில்லை. கார் ஸாராவை மோதி, அவரது உடல்மீது ஏறிச்சென்றது,” என்றார் மரண விசாரணை அதிகாரி.
தொடர்புடைய செய்திகள்
இரண்டு பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்து காரில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த ஓட்டுநர், திடீரென தமது கார் எதையோ மோதி, ஏறிச்சென்றதை உணர்ந்தார்.
கண்ணாடியில் பார்த்தபோது, தாம் ஒரு குழந்தையை மோதிவிட்டதை உணர்ந்தார்.
பணிப்பெண்ணும், 40 வயது ஆஸ்திரேலிய மாதான அந்த ஓட்டுநரும் உடனடியாக ஸாராவை நோக்கி விரைந்தனர். அவரது மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் அதிக அளவில் ரத்தம் கசிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஸாரா தென்பட்டதற்கும், காரால் மோதப்பட்டதற்கும் இடையே ஒரு நொடி இடைவெளி மட்டுமே இருந்ததை காரின் கேமராவில் பதிவான காணொளிகள் காட்டின.
அதனால் ஓட்டுநர் காரை நிறுத்தாததும், உடனடி நடவடிக்கை எடுக்காததும் ஆச்சரியத்துக்குரியது அல்ல என்றார் மரண விசாரணை அதிகாரி.

