வாகனத்தை அதிவேகமாக ஓட்டியதாலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாலும் உயிரிழப்பு நேர்ந்த சாலை விபத்துகள் 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் அதிகரித்துள்ளன.
சாலை விபத்துகளில் 2023ஆம் ஆண்டின் முற்பாதியில் உயிரிழந்த 71 பேரைக் காட்டிலும் இவ்வாண்டு சற்று கூடுதலாக 73 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மோட்டார்சைக்கிளோட்டிகள் மற்றும் அவர்களுடன் பயணம் செய்தவர்களாவர்.
உயிரிழந்த நடையர்களில் 10ல் நால்வர் 65 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்கள் என்று ஆகஸ்ட் 24ஆம் தேதி போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
“முதியவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளை போக்குவரத்துக் காவல்துறை மேற்கொண்டு வந்தாலும் சாலையைச் சட்டவிரோதமாகக் கடக்க வேண்டாம் என்று அந்த முதியவர்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் வலியுறுத்த வேண்டும். அதன்வழி அவர்கள் சாலைகளில் பாதுகாப்பாக இருப்பதற்கு நாம் உதவலாம்,” என்று அதிகாரிகள் கூறினர்.
வேகக் கட்டுப்பாட்டை மீறி வாகனம் ஓட்டுவதாலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதாலும் சாலை விபத்துகளில் உயிரிழப்பு நேர்ந்த சம்பவங்கள் அதிகரித்துள்ளது தொடர்பில் பேசிய காவல்துறையினர், கடந்த மூவாண்டுகளாகக் காணப்படும் இந்தப் போக்கு கவலைக்குரியதாக உருவெடுத்துள்ளது என்றனர்.
வேகக் கட்டுப்பாட்டை மீறி வாகனம் ஓட்டியதால் நேர்ந்த உயிரிழப்புச் சம்பவங்கள், 2022ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஆறாகவும் மறு ஆண்டின் முதல் பாதியில் 13ஆகவும் அதிகரித்தன. இவ்வாண்டின் முதல் பாதியில் கிட்டத்தட்ட அவை இரட்டித்து 25 சம்பவங்களாகப் பதிவாகியுள்ளன.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி உயிர்ச்சேதம் விளைவித்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டின் முதல் பாதியில் மூன்றாகப் பதிவானது. தொடர்ந்து, 2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் எட்டாகவும் இவ்வாண்டின் முதல் பாதியில் ஒன்பதாகவும் அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, சிவப்பு விளக்கு கேமராக்களில் தொடர்ந்து வேக அமலாக்க அம்சத்தைப் படிப்படியாகப் போக்குவரத்துக் காவல்துறை செயல்படுத்தும் என்று காவல்துறை கூறிற்று. மேலும், வாகனத்தைப் பொறுப்பற்ற முறையில் ஓட்டும் நடத்தையைத் தவிர்க்க, குறிப்பிட்ட சில போக்குவரத்துக் குற்றங்களுக்கான அபராதத் தொகையையும் குற்றப் புள்ளிகளையும் அதிகரிக்கச் செய்வதில் கவனம் செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
வேக வரம்பை மீறுவது தொடர்பான சம்பவங்கள் 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் 77,773ஆக பதிவாகின. கடந்த ஆண்டு முதல் பாதியில் பதிவான 53,906 சம்பவங்களைக் காட்டிலும் இது 44.3% அதிகமாகும்.
மோட்டார்சைக்கிளோட்டிகள் தொடர்பாக இவ்வாண்டின் முதல் பாதியில் பதிவான சாலை விபத்துகள் குறித்தும் காவல்துறையினர் பேசினர். சரிவரக் கவனிக்கத் தவறுதல், வண்டியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறுதல், கவனமின்றி தடம் மாறுதல் ஆகியவையே பெரும்பாலும் இத்தகைய விபத்துகள் ஏற்பட காரணங்கள் என்று அதிகாரிகள் விளக்கினர்.