பொங்கோலில் சாலை விபத்து: மோட்டார்சைக்கிளோட்டி மரணம்

2 mins read
523d133a-1a69-46f5-aa9b-62785108ee2c
பொங்கோல் வே, சுமாங் லிங்க் சந்திப்பில் ஆகஸ்ட் 12 காலை 6.45 மணிக்கு விபத்து நேர்ந்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன. - காணொளிப் படம்: சிங்கப்பூர் ரோட்ஸ் ஆக்சிடென்ட் / ஃபேஸ்புக்

பொங்கோல் வே, சுமாங் லிங்க் சந்திப்பில் இரண்டு வேன்களும் ஒரு மோட்டார்சைக்கிளும் மோதிய விபத்தில் பணியில் இல்லாத சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) அதிகாரி ஒருவர் மரணமடைந்தார்.

செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) காலை சுமார் 6.45 மணிக்கு விபத்துக் குறித்துத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் எஸ்சிடிஎஃபும் தெரிவித்தன.

50 வயது ஆடவரான மோட்டார்சைக்கிளோட்டி விபத்து நேர்ந்த இடத்தில் மாண்டதை எஸ்சிடிஎஃபின் மருத்துவ உதவியாளர்கள் உறுதிசெய்தனர்.

மோட்டார்சைக்கிளின் பின்னிருக்கையில் பயணம் செய்த 15 வயது இளைஞர் சுயநினைவுடன் இருந்த நிலையில் கேகே பெண்கள், மகளிர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

வேன்களை ஓட்டிய 40, 54 வயதுடைய ஆடவர்கள் இருவரும் காவல்துறையின் விசாரணையில் உதவி வருகின்றனர்.

காணொளியொன்றில் மோட்டார்சைக்கிளுக்கு அருகில் நீலநிறக் கூடாரம் இருந்ததைப் பார்க்கமுடிந்தது. விபத்து நிகழ்ந்த இடத்தில் காவல்துறை வாகனங்களுடன் அதிகாரிகள் இருந்ததையும் அதில் காணமுடிந்தது.

காலஞ்சென்ற அதிகாரியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்வதாகவும் இந்தத் துயரமான நேரத்தில் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துவருவதாகவும் எஸ்சிடிஎஃப் கூறியது.

இரண்டு நாள்களில் நேர்ந்துள்ள இரண்டாவது கோர விபத்து அது.

திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11) மாலை, தீவு விரைவுச்சாலையில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார்சைக்கிளோட்டிய 22 வயது ஆடவர் மாண்டார். மோட்டார்சைக்கிள் கனரக வாகனத்துடன் மோதியதில் அவர் பலியானார்.

காவல்துறையின் அண்மைப் புள்ளிவிவரங்களின்படி, போக்குவரத்து விபத்துகளில் மரணமடைந்தோரின் எண்ணிக்கையும் காயமடைந்தோரின் எண்ணிக்கையும் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடந்த ஆண்டில் (2024) உச்சத்தைத் தொட்டது. சென்ற ஆண்டு மரணம் விளைவித்த விபத்துகளின் எண்ணிக்கை 139.

குறிப்புச் சொற்கள்